கன்டென்ட் வறட்சியால் சொதப்பிய ஸ்டார் படங்கள்: மீளுமா தெலுங்கு சினிமா? - ஒரு விரைவுப் பார்வை

By கலிலுல்லா

அண்மையில் அறிவிக்கப்பட்ட 69-ஆவது தேசிய விருது பட்டியலில் ‘ஆர்ஆர்ஆர்’ 6 விருதுகளையும், ‘புஷ்பா’ 2 விருதுகளையும் வென்றது. இது தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்த வரவேற்பு என்றாலும், இந்த ஆண்டு டோலிவுட் படங்கள் பெரிய அளவில் இதுவரை சோபிக்காத நிலையே நீடிக்கிறது. ஆண்டுத் தொடக்கத்தில் சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படமும், பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படமும் நல்ல வசூலை குவித்து அமோக தொடக்கத்தை கொடுத்தது. ஆனால், அதன்பிறகு வெளியான படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

குறிப்பாக ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்ட படங்கள் அதன் தரமற்ற உள்ளடக்கத்தால் மக்களிடம் விலைபோகவில்லை. அப்படிப்பார்க்கும்போது, சமந்தாவின் ‘சாகுந்தலம்’ பட புரமோஷன்கள் ஆந்திரா, தெலங்கனாவைத் தாண்டி நீண்டது. ஆனால் அதன் கன்டென்ட்டோ பழைய சினிமா ஸ்கிரிப்ட் ஃபார்மெட்டிலிருந்து மீளவில்லை. இதனால் படம் படுதோல்வியடைந்தது.

அடுத்து ‘ஆதிபுருஷ்’. பிரபாஸுக்கு ‘பாகுபலி’ கைகொடுத்தவுடன் ‘ஹைப்’ இருந்தது. அந்த ஹைப்புக்காக அவர் தொடர்ந்து கையெழுத்திட்ட படங்களில் இந்தப் படமும் ஒன்று. டீசரின்போது கிராஃபிக்ஸ் காட்சிகள் விமர்சிக்கப்பட்டதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துவிட்டு கோடிகள் செலவிட்டு கிராஃபிக்ஸ் காட்சிகளை செப்பணிடும் பணி நடைபெற்றது. புரமோஷனுக்காக பல யுக்தியை கையாண்ட குழு, அனுமானுக்கு ஒரு சீட் ஒதுக்கவும் கோரியது. படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இறுதியில் ‘ஹைப்’ மட்டுமே மிஞ்சியது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ நாக சைதன்யாவுக்கும் சேர்த்து சிறைவைத்தது. ப்ரஸ்மீட், இன்டர்வியூ என சுழன்றடித்த புரமோஷனில் கன்டன்டின் தரத்தை பரிசோதிக்க படக்குழு மறந்துவிட்டது. இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஏமாற்றத்தை பரிசளித்தது. தவிர, ‘ஏஜெண்ட்’, ‘ஸ்பை’ போன்ற படங்களும் தோல்வியை தழுவின.

பெரிய நடிகர்களின் படங்களாவது தெலுங்கு திரையுலகை மீட்சி பெற வைக்கும் என நினைத்துகொண்டிருந்தபோது, பவன் கல்யாணின் ‘ப்ரோ’ ஜூலையில் வெளியானது. ஆனால் ‘என்னா ப்ரோ?’ என ரசிகர்களால் கலாய்க்கப்பட்டது. இந்த மாதம் வெளியான சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ திரைப்படம் ‘போதும் சங்கர்’ என ரசிகர்களால் அயற்சிக்குள்ளாக்கப்பட்டது.

மேற்கண்ட ‘ஓவர் ஹைப்’ படங்களுக்கு நடுவே சப்தமில்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸ் கலக்‌ஷனால் விளம்பரம் தேடிக்கொண்டது விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்த ‘பேபி’. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.85 கோடி வசூலை குவித்தது. இதை தவிர்த்து மற்ற தெலுங்கு படங்கள் சோபிக்காத நிலையில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலங்கானா பகுதியில் வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவுக்கு இந்தாண்டு ஒரு பெரிய ப்ளாக்ஸ் பஸ்டர் தேவையாக இருக்கிறது. காரணம் சொல்லிக்கொள்ளும்படியான தெலுங்கு படங்கள் இந்த ஆண்டு இதுவரை அமையவில்லை. அந்த வகையில் அடுத்த 4 மாதங்களில் வர உள்ள படங்கள் ரசிகர்களிடையே இந்த ஆண்டின் ஹிட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பிரசாந்த் நீல் - பிரபாஸின் ‘சலார்’. இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெரிய பட்ஜெட்டையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, அக்டோபர் 20-ம் தேதி வெளியாகும் ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’, பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’, ராம் பொத்தினேனியின்‘ஸ்கண்டா தி அட்டாகர்’ (skanda - the attacker), ஆகிய படங்கள் வரிசையில் உள்ளன. செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ள விஜய்தேவரகொண்டா - சமந்தாவின் ‘குஷி’, அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி’ படங்களையும் சேர்த்துகொள்ளலாம். மேற்கண்ட படங்கள் தெலுங்கு சினிமாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE