“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; சூப்பர்ஸ்டார் பட்டம் மக்கள் கொடுத்தது” - விஷால் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஷால் தனது 46 ஆவது பிறந்தநாளை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோமில் இருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், “ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் அவர்களை பராமரித்து வரும் கன்னியாஸ்திரிகளிடம் வாழ்த்து பெறுவது, கடவுள் நேரில் வந்து வாழ்த்துவது போன்ற ஒரு உணர்வை தருகிறது. என் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது இப்படியான விஷயங்கள் என் பிறந்த நாளில் செய்வது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

விஜய் அரசியல் குறித்து பேசுகையில், “விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் அறிவிக்கட்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என வரவேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தால் நல்லது” என்றார்.

ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து கேட்டதற்கு, “சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அவருக்கு (ரஜினிகாந்த்) 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் அவர் திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார். மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்” என்றார்.

விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடிக்கப்படும் என தெரிவித்த விஷால், மிஷ்கின் குறித்து பேசுகையில், “துப்பறிவாளன் பார்ட் 2 நான் தான் இயகுக்கிறேன். மிஷ்கின் கதை. திரைக்கதையை மாற்றியிருக்கிறேன். இயக்குநராக நான் ரசிக்கும் ஒருவர் மிஷ்கின். ஒரு அண்ணன் ஸ்தானத்தில் அவர் இருப்பார். ஆனால் தயாரிப்பாளராக அப்படி பார்க்கமுடியாது. அதைப் பற்றி நான் கூறவும் விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து அவரிடம் தேசிய விருது தேர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு, “4 பேர் அமர்ந்து கொண்டு, விருதாளர்களை தேர்வு செய்வதிலெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE