திரை விமர்சனம்: ஹர்கரா

By செய்திப்பிரிவு

போடி அருகே உள்ள கீழ்மலை என்னும் மலைகிராமத்தில் அஞ்சல்காரராக பணியாற்றுகிறார் காளி. ஆனால் அங்கே பணியாற்ற அவருக்கு விருப்பம் இல்லை. எப்படியாவது பணிமாறுதல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட திட்டமிடுகிறார். அச்சமயத்தில் அந்த ஊர்மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வரும் மாதேஸ்வரன் என்னும் பிரிட்டிஷ் கால தபால்காரரின் (ஹர்காரா) வாழ்க்கைக் கதை தெரியவருகிறது. அதன்பின் காளி தனது வேலையையும் அந்த ஊரையும் எப்படி எதிர்கொண்டார் என்பது கதை.

ஜீப்பையும் கோவேறுக் கழுதைகளையும் தவிர வேறு போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத மலைக் கிராமத்தில் உள்ள அஞ்சல் நிலையம், கைபேசி சிக்னல் கிடைக்கவில்லை, கிராம மக்களின் வெள்ளந்தியான தொந்தரவுகள் என்பனவற்றைத் தவிர, காளி அந்த ஊரை வெறுத்து வெளியேற நினைப்பதற்கான காரணம், தற்காலத்தில் வாழும் அஞ்சல்காரரின் அன்றாடப் பிரச்சினைகளுடன் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாதேஸ்வரன் என்கிற அஞ்சல்காரரின் கதையை இணைக்கும் புள்ளி, ஊரைக் காக்க மாதேஸ்வரன் மறைத்து வைக்கும் ஆவணங்களின் ரகசியம் ஆகியவற்றை அழுத்தமாக அமைக்காதது திரைக்கதை சறுக்கல்.

தவிர திரைக்கதை ஆசிரியருக்கு கழுவேற்றம் என்கிற மரணத் தண்டனை குறித்து எந்த ஆய்வுத் தெளிவும் இல்லை. கழுவேற்றம் 6-ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் பின்னர் பெருந்திரள் சமணர் கழுவேற்றத்தின்போதும் அது தமிழ்நாட்டின் வரலாற்றில் பெரும் ரத்தக் கறையாகப் படிந்திருக்கிறது. துப்பாக்கியையும் பீரங்கியையும் வைத்திருந்த ஆங்கிலேயர் அதைப் பயன்படுத்தினார்கள் என்பது அபத்தம்.

தபால்காரர் காளி, டீகடைக்காரர் கண்ணன்,கங்காணி, பித்தன், மாரியம்மாள் ஆகியதுணைக் கதாபாத்திரங்களைச் சுவாரஸ்யமாக எழுதிய அளவுக்குக் கதையின் நாயகனான மாதேஸ்வரன் கதாபாத்திரத்தை உணர்வுபூர்வமாக எழுதத் தவறிவிட்டார்கள்.

திரைக்கதை வெறும் கூடாக இருந்தபோதும் தற்காலத்தின் தபால்காரராக வரும் காளி, தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் சிரிக்கவும் பரிதாபப்படவும் வைக்கிறார். ‘ஹர்காரா’ மாதேஸ்வரனாக வரும் ராம் அருண் கேஸ்ட்ரோ சிலம்பச் சண்டையில் அப்படியே பழங்காலத்தைப் பிரதிபலிக்கிறார். துடிப்பும் துள்ளலும் மிக்க நடிப்பை அவர் தந்தாலும் உணர்ச்சிகரமான காட்சிகளில் ஈர்க்கத் தவறும் அவர், எல்லாவற்றையும் சேர்த்து வைத்து கிளைமாக்ஸில் மொத்தமாக ஸ்கோர் செய்துவிடுகிறார்.

கதாநாயகியாக சில காட்சிகளில் வரும்கவுதமி சவுத்ரி உட்படத் துணைக் கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் நேர்த்தியான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரே கதைக் களத்தில் தற்காலத்தையும் 150 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் காலத்தையும் ஒளிப்பதிவு, கலை இயக்கம் மூலம் நம்பகமாகக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் ராம் அருண் கேஸ்ட்ரோவுக்குப் பாராட்டுகள்.

வரலாற்றின் நிழலுடன் கற்பனைக் கதைக் களத்தை உருவாக்கினாலும் பார்வையாளர்களை உற்சாகமூட்ட அழுத்தமான நிகழ்வுகள், சுவாரஸ்யமான காட்சிகள், பிழையற்ற மீள் உருவாக்கம் ஆகியன மிக முக்கியம். அதில் அதிகமாகவே சறுக்கி விழுந்திருக்கும் ‘ஹர்காரா’ பரிதாபத்துக்குரியவன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE