பெற்றோரை இழந்து வாழ்வில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் ஜீவா (ஜி.வி.பிரகாஷ்). அப்போது, பள்ளிப் பருவத்தில், ஒரு தலையாகக் காதலித்த செந்தாழினி (கவுரி ஜி.கிஷன்), இப்போது பின்னணிப் பாடகியாக இருப்பதையும் அவள் இப்போதும் தன்னை நினைவில் வைத்திருப்பதையும் அறிகிறார். செந்தாழினியிடம் தனது காதலைச் சொல்லும் ஜீவாவின் முயற்சிகளுக்கு பல்வேறு தடைகள் வருகின்றன. திடீரென சாலை விபத்தில் சிக்கும் ஜீவா, கண் விழிக்கும்போது வேறொரு உலகத்தில் இருக்கிறார். அங்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் அர்ஜுன் என்று அழைக்கப்படுகிறான். செந்தாழினி மனைவியாக இருக்கிறார். சுற்றி நடக்கும் எதுவும் புரியாமல், மாற்று உலகத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறும் ஜீவா, ஒரு கட்டத்தில் செந்தாழினியுடன் சந்தோஷமாக, மாற்று உலகிலேயே வாழ்ந்துவிட முடிவெடுக்கும்போது நிஜ உலகுக்குள் வருகிறார். மீண்டும் மாற்று உலகுக்குச் செல்கிறார். இப்படி மாறி மாறிப் பயணித்து இறுதியில் செந்தாழினியின் கரம் பற்றினாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
மாற்று யதார்த்தம் (ஆல்டர்னேட் ரியாலிட்டி) என்னும் புதிய கருத்தாக்கத்தை வைத்து வழக்கமான ஒருதலைக் காதல் கதையை சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். டைம் லூப், டைம் ட்ராவல், மல்டி வெர்ஸ், ஆல்டர்னேட் ரியாலிட்டி என்று அண்மைக் காலமாக தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு அறிமுகமாகிவரும் ஐடியாக்களை வைத்து பல சுவாரசியமான காட்சிகளையும் வசனங்களையும் உருவாக்கியிருக்கிறார். ஆனால் கதையின் பழமையும் திரைக்கதையின் தொய்வும் இந்த சுவாரசியங்கள் அளிக்க வேண்டிய நிறைவை மட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக நாயகனின் முன்கதையைச் சொல்லும் தொடக்கக் காட்சிகளும் இரண்டாம் பாதியின் பல காட்சிகளும் இறுதிப் பகுதியும் பொறுமையை சோதிக்கின்றன.
‘ஆல்டர்னேர்ட் ரியாலிட்டி’ உலகில் சென்னையின் பெயர் மெட்ராஸ் ஆகவே இருப்பது, கால்பந்து வீரர் சச்சின் டெண்டுல்கர், பைக் ரேஸர் அஜித், கிரிக்கெட் பயிற்சியாளர் மணிரத்னம், நடனக் கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் பிரபுதேவா என நிஜ உலக பிரபலங்கள் மாற்று உலகில் வேறு துறையில் சாதனையாளர்களாக இருப்பதாகக் கூறும் வசனங்கள் கைதட்டல்களைப் பெறுகின்றன. ஆல்டர்னேட் ரியாலிட்டி என்றால் என்ன என்பதை விளக்கும் காட்சிகள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
ஜி.வி.பிரகாஷ் நிஜ உலகில் ஒருதலைக் காதல் கைகூடாத வேதனையையும் மாற்று உலகில் எதையும் புரிந்துகொள்ள முடியாத தடுமாற்றத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கவுரி கிஷன் நிஜ மாற்று உலகக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நிஜ உலகில் ஆல்டர்னேட் ரியாலிட்டி கருவியைத் தயாரிக்கும் விஞ்ஞானிகள் குழுவின் தலைவராகவும் மாற்று உலகில் அறிவியல் புனைவுப் படங்களை இயக்கும் கவுதம் மேனன் ஆகவும் இரண்டிலும் கலக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. இரண்டு உலகங்களிலும் நாயகனின் நண்பனாக ஆர்ஜே விஜய் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை திரைக்கதைக்குத் துணை புரிந்திருக்கிறது. பாடல்களும் இனிமை. கோகுல் பினோயின் வண்ணமயமான ஒளிப்பதிவு கதைக் களத்துக்குப் பொருத்தமாக உள்ளது.
இரண்டு உலகுக்கும் மாறி மாறிப் பயணிக்கும் கதையை குழப்பாமல் சொல்லி இருப்பதில் படத்தொகுப்பாளர் முத்தையனின் பங்களிப்பைப் பாராட்டலாம்.
ஒரு தலைக் காதல் என்னும் வழக்கமான தின்பண்டத்தை ஆல்டர்னேட் ரியாலிட்டி என்னும் புதிய சுவையுடன் படைத்திருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். இதை வைத்து பசியாற முடியாது என்றாலும் ருசித்துப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago