கதையே கேட்காமல் ‘சந்திரமுகி’ ஆக நடிக்க ஒப்புக் கொண்டார் கங்கனா: பி.வாசு

By செய்திப்பிரிவு

சென்னை: கதை கேட்காமலேயே ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டதாக இயக்குநர் பி.வாசு தெரிவித்துள்ளார்.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்படம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் பி.வாசு பேட்டியளித்துள்ளார். அதில், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ஒப்பந்தமானது குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’சந்திரமுகி’ கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்க வைப்பது என்று முடிவு செய்யாமலேயே முக்கால்வாசி படத்தை முடித்துவிட்டேன். படப்பிடிப்பின்போது ராதிகா உள்ளிட்ட பலரும் ‘யார் சந்திரமுகியாக நடிப்பது?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்.

அப்படியான சூழலில் கங்கனாவிடம் இந்திப் படம் ஒன்றுக்காக கதை சொல்வதற்காக அவரை நேரில் சந்தித்தேன். கதையை முழுமையாகக் கேட்டவர். இப்போது என்ன படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். ’சந்திரமுகி 2’ என்று சொன்னேன். மிகவும் ஆச்சர்யமாக ‘அப்படியா? உண்மையாகவா?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டு ‘சந்திரமுகி’ பாத்திரத்தில் யாரை ஒப்பந்தம் செய்துள்ளீர்கள்?” என்று கேட்டார். இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை என்று நான் கூறினேன். பின்னர் அந்த சந்திப்புக்குப் பிறகு நான் சென்னை வந்துவிட்டேன். மறுநாள் எனக்கு கங்கனாவிடம் இருந்து போன் வந்தது. ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன்’ என்று அவர் சொன்னார். கதையே கேட்காமல் கங்கனா நடிக்க ஒப்புக் கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும். இப்படத்துக்குப் பிறகு கங்கனாவின் நடிப்பு குறித்து பேசாதவர்களே இருக்கமுடியாது” இவ்வாறு பி.வாசு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE