இந்தியா Vs அயர்லாந்து டி20 கிரிக்கெட் வர்ணனையில் பேசப்பட்ட ‘ஜெயிலர்’

By செய்திப்பிரிவு

அயர்லாந்து: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ரஜினியின் ‘ஜெயிலர்’ குறித்து பேசப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அயர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தனர். இந்த ஆட்டத்தின்போது போட்டி வர்ணனையாளர் நியால் ஓ பிரையன் ( Niall O'Brien) கிரிக்கெட்டைக் கடந்து சில விஷயங்களைப் பேசினார். அவர் பேசுகையில், “அயர்லாந்தில் நடைபெற்ற சிறப்பு திரையிடலுக்கு சஞ்சு சாம்சன் அவரது ஃபேவரைட் நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். படத்தை கண்டு ரசித்த சஞ்சுவுக்கு இது பெருமை மிகு தருணமாக இருக்கும்” என குறிப்பிட்டு பேசினார். இந்த வீடியோ மட்டும் தனியே கட் செய்யப்பட்டு ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர். அவரின் அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பார்த்துவிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் சஞ்சு சாம்சன் அவரின் ஆஸ்தான நடிகரான ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியிருந்தார்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்த அவர், “7 வயதிலிருந்தே நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகன். ‘ஒருநாள் நிச்சயம் ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்திப்பேன்’ என்று என்னுடைய பெற்றோரிடம் கூறியிருந்தேன். 21 வருடங்கள் கழித்து அந்த நாள் வந்தது. ரஜினி என்னை அவர் வீட்டுக்கு அழைத்தார்” என பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE