அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ரஜினி தரிசனம்!

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசப் பயணத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை அயோத்திக்கு சென்று ராமர் கோயிலில் தரிசனம் செய்தார். மனைவி லதாவுடன் இரவு லக்னோவிற்கு திரும்புபவர் மேலும் ஒருநாள் அங்கு தங்குகிறார்.

தென்னிந்தியாவின் முதல் முக்கிய பிரபலமாக நடிகர் ரஜினிகாந்த், இன்று அயோத்தி வந்தார். தனது மனைவி லதாவுடன் வந்தவரை அயோத்தி பகுதியின் ஆணையரான கவுரவ் தயாள், காவல்துறை ஐஜி பிரவின் குமார் மற்றும் முனிசிபல் ஆணையரான விஷால் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் தரிசனம் செய்தவருக்கு சிறப்பு பூசை நடத்தப்பட்டது. பிறகு ராமர் கோயில் கட்டிடங்களை அவர் சுற்றி பார்த்தார். ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சாரியா சத்யேந்தர் தாஸ், ரஜினிக்கு ராமர் கோயிலை போன்ற சிற்பத்தை பரிசாக அளித்தார். பிறகு மனைவியுடன் லக்னோ திரும்பும் முன் செய்தியாளர்களிடம் ரஜினி பேசினார்.

அப்போது அவர், ‘அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக நான் பல வருடங்களாக காத்திருந்தேன். இன்றுதான் எனது வேண்டுதல் பூர்த்தியாகி உள்ளது. கடவுள் விரும்பினார் நான் ராமர் கோயில் கட்டி முடித்த பின் கு மீண்டும் வருவேன்.’ எனத் தெரிவித்தார்.

ராமர் கோயிலுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் அதற்கு முன் இருக்கும் அனுமர் மடத்தின் கோயிலுக்கும் சென்று அனுமரை தரிசித்தார். இங்கு செய்தியாளர்களிடம் பேசியவர். இதற்காக நான் பாக்கியசாலியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாலை லக்னோவிற்கு திரும்பியவர் இன்று இரவும் அங்கு தங்குகிறார். நாளை இந்திய ராணுவத்தின் சில முக்கிய அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார். அதன் பிறகு அவர் தனது நான் நாள் பயணத்திற்கு பின் இரவு சென்னை திரும்ப உள்ளார்.

முன்னதாக.. தனது ஜெயிலர் திரைப்படம் வெளியீட்டிற்கு பின் இமயமலை சென்றிருந்தார் ரஜினிகாந்த். அங்கிருந்து ஜார்கண்டிற்கும் சென்றவர், கடந்த வெள்ளிகிழமை உத்தரப்பிரதேசம் லக்னோவிற்கு வந்தார். நேற்று, உபியின் ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்தார். பிறகு நண்பகலில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் தனது ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தார்.

இந்த சிறப்புக் காட்சியை பார்ப்பதற்காக ரஜினியின் மனைவி லதாவும் சென்னையிலிருந்து கிளம்பி வந்திருந்தார். இந்நிகழ்ச்சியை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் அமர்ந்து பார்ப்பதாக இருந்தது.

ஆனால், நேற்று காலை உபி முதல்வர் யோகி, அயோத்தியில் ராமர் கோயில் பணிகளை பார்வையிடச் சென்றிருந்தார். பிறகு அவர் மாலை சற்று தாமதமாகத் திரும்பியதால் முதல்வர் யோகியால் ஜெயிலர் படம் பார்க்க முடியவில்லை.

எனினும், முதல்வர் யோகியை அவரது வீட்டிற்கு சென்று தன் மனைவி லதாவுடன் சந்தித்தார் ரஜினி. பிறகு இன்று அயோத்திக்கு செல்வதாக திட்டமிட்டவர், அதற்கு முன்பாக திடீர் என எவரும் எதிர்பாராதவகையில் ரஜினி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவை சந்தித்தார்.

உபியின் எதிர்கட்சி தலைவரான அகிலேஷின் அரசு குடியிருப்பில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இவரது வீட்டிற்கு சென்று அகிலேஷை கண்டதும் ரஜினி அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறும்போது, ‘அகிலேஷை சுமார் 9 வருடங்களுக்கு முன் மும்பையின் ஒரு விழாவில் சந்தித்தேன், அப்போது முதல் அவருடன் எனது நட்பு தொடர்கிறது.

அதன் பிறகு நண்பரான அவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தேன். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவரை என்னால் சந்திக்க முடியாமல் போனது. எனவே, இந்தமுறை அவரை தவறாமல் சந்தித்து விட்டேன்.’ என்றார்.

தலைவர் அகிலேஷுடன் சந்தித்த பின் சமாஜ்வாதி நிறுவனரான முலாயம்சிங் யாதவ் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த். பிறகு சுமார் அரை மணி நேரம் அகிலேஷுடன் அமர்ந்து பல்வேறு விவகாரங்களை இருவரும் பேசினர்.

ரஜினியுடனான தனது சந்திப்பால் மகிழ்ந்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் தனது ட்விட்டரில் கூறும்போது, ‘இரண்டு மனங்கள் சந்திக்கும் போது மகிழ்வாக உள்ளது. நான் மைசூரில் பொறியில் கல்லூரியில் படிக்கும் காலம் முதல் ரஜினியின் ரசிகனாக இருந்தேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் உபி முதல்வர் யோகியை சந்தித்த ரஜினிகாந்த், அவர் ஒரு துறவி என்பதால் காலில் விழுந்து வணங்கி இருந்தார். அகிலேஷ் நண்பர் என்பதால் கட்டியணத்து மகிழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அகிலேஷின் மனைவியான டிம்பிள் யாதவும் உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE