மும்பை: பாஜக உடனான தொடர்பு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பியதால், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நேர்காணல் ஒன்றில் இருந்து பாதியில் வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியில் ‘சாக்லேட்’, ‘ஹேட் ஸ்டோரி’, ’சித்’ உள்ளிட்ட படங்லளை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் விவாதங்களை கிளப்பியது. தொடர்ந்து விவேக் அக்னிஹோத்ரியின் சர்ச்சையான கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். தற்போது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் அன்ரிப்போர்ட்டர்’ என்ற ஒரு புதிய வெப் தொடரை விவேக் அக்னிஹோதிரி இயக்கியுள்ளார். இதன் புரொமோஷனுக்காக தனியார் ஊடகம் ஒன்றுக்கு விவேக் அக்னிஹோத்ரி பேட்டியளித்திருந்தார்.
பேட்டியின்போது, பெண் தொகுப்பாளர் விவேக் அக்னிஹோத்ரியிடம் பாஜக உடனான தொடர்பு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து கேள்வி எழுப்பியதால் பேட்டியிலிருந்து அவர் பாதியில் வெளியேறினார். தொகுப்பாளர் கேட்ட கேள்விகள் மற்றும் விவேக் அக்னிஹோத்ரியின் பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொகுப்பாளர்: உங்கள் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
விவேக்: முதலில் இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. ஏராளமான மக்களுக்கு இந்த படம் பிடித்திருக்கிறது. அவர்கள் இந்த படத்தை பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.
தொகுப்பாளர்: ஆனால் நான் கேட்பது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய மக்கள் குறித்து.. உங்களுக்கு அது குறித்து கவலை இல்லையா?
விவேக்: நிச்சயமாக அது எனக்கு கவலை அளிக்கிறது. நான் அப்போதே அதனை கண்டித்து ட்வீட் செய்திருந்தேன். அதை தவறு என்று கூறியிருந்தேன். ஆனால் அப்படி நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. என்னுடைய படம் இந்தியாவில் நடந்த இந்துக்கள் படுகொலைகளைப் பற்றி முதன்முறையாக பேசிய புரட்சிகர படம். யாரோ ஐந்து, ஆறு பேர் கோஷம் எழுப்பியது குறித்து நீங்கள் பேசினால், கடந்த 30 ஆண்டுகளாக யாரும் அவர்களை பேசவிடவில்லை.
தொகுப்பாளர்: ஆனால் பாஜக 1990ல் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் குறித்து பேசி வருகிறதே?
விவேக்: நான் ஒன்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்ல. அவர்களுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
தொகுப்பாளர்: ஆனால் பாஜகவினர் உங்கள் படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள்.
விவேக்: படத்தை பார்த்த கோடிக்கணக்கான மக்கள் பாஜகவினர் அல்ல. அனைத்து தரப்பு மக்களும் என் படத்தை விளம்பரப்படுத்தினர். பெண்கள், LGBTQ சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் என் படத்தை விளம்பரப்படுத்தினர். அதில் பாஜகவும் ஒரு அங்கம். உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை? பாஜகவினர் இந்தியர்கள் இல்லையா?
தொகுப்பாளர்: நான் கேட்பது அரசாங்கம் ஏன் உங்கள் படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்? பிரதமர் மோடி உங்கள் படத்தை விளம்பரப்படுத்தினார்.
இதன்பிறகு விவேக் அக்னிஹோத்ரியின் மேலாளர் பேட்டியை முடித்துக் கொள்ளும்படி கூறவே மைக்கை கழற்றிவிட்டு பேட்டியிலிருந்து வெளியேறினார் விவேக் அக்னிஹோத்ரி. செல்வதற்கு முன்பாக தொகுப்பாளரை நோக்கி, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இதனை எங்கு கொண்டு செல்வீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த பேட்டியை தவறான வகையில் காட்டினால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்” என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago