திரை விமர்சனம்: 3.6.9

By செய்திப்பிரிவு

கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் அதன் பங்குத் தந்தை பென்னட் கேஸ்ட்ரோ (கே.பாக்யராஜ்) ஞாயிற்றுக்கிழமை வழிப்பாட்டைத் தொடங்குகிறார். அந்த நேரத்தில், சைரஸ் (பி.ஜி.எஸ்) என்பவன் தலைமையில் அங்கே மறைந்திருக்கும் கும்பல் துப்பாக்கி முனையில் பக்தர்களைச் சிறைபிடிக்கிறது. அவர்களது குறி, பங்குத் தந்தை பென்னட் கண்டுபிடித்துள்ள ‘டெலிபோர்ட்’ (Teleportation) கருவியின் வரைபடத்தை அங்கிருந்து திருடிச் செல்வது. பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற, தனது கண்டுபிடிப்பின் ரகசியத்தை அந்தத் துப்பாக்கிக் குழுத் தலைவனிடம் கொடுக்கிறார். பிறகு பக்தர்களும் பங்குத் தந்தையும் அவர்களிடமிருந்து தப்பித்தார்களா, இல்லையா என்பது கதை.

ஒரு தேவாலயத்துக்குள் நடக்கும் அறிவியல் புனைவுக் கதை. அதை எழுதி, இயக்கியிருக்கும் சிவா மாதவ், மாரிஸ்வரன் மோகன்குமார் தலைமையிலான ஒளிப்பதிவுக் குழுவினர் மூலம், 24 கேமராக்களைக் கொண்டு 81 நிமிடங்களில் முழுப் படத்தையும் படமாக்கி, உலகச் சாதனையாக முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் ஈர்ப்பான அம்சங்கள், கதை, லொகேஷன், படத்தொகுப்பு ஆகியன. இயற்கை எழில் சூழ்ந்த, ஏரிக்கரையின் மீது அமர்ந்துள்ள அழகான தேவாலயத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஞாயிறு வழிபாட்டுக்கு வரும் அப்பகுதியின் பக்தர்கள் சிலரின் தனிப்பட்ட பிரச்சினைகளை காதுகொடுத்துக் கேட்கிறார் பங்குத் தந்தை பென்னட். பின்னர் அந்தப் பக்தர்கள் தேவாலயத்துக்குள் பிணையக் கைதிகள் ஆகும்போது, திரைக்கதையில் அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை இயக்குநர் தொடர்புபடுத்துவார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். கத்தோலிக்க வழிபாட்டில் நிலைபெற்றிருக்கும் நடைமுறைகளை ஆய்வு செய்யாமல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. விவிலிய வசனங்களைக் கொண்டு, ஹீரோவுக்கும் வில்லனுக்குமான உரையாடலில் பெரிய சாகசத்தை நிகழ்த்தியிருக்கலாம். இதுபோல் நிறைய தவறவிட்டிருக்கிறார் இயக்குநர்.

24 கேமராக்களை பொருத்திய இடங்கள் காட்சிகளில் தெரியாதபடி எடிட் செய்திருக்கும் ஆர்.கே.நாத்தின் படத் தொகுப்பு படத்தைக் காப்பாற்றியிருக்கிறது. ஆனால், ஒளிப்பதிவு பல இடங்களில் தடுமாறுகிறது. பெரும்பாலான துணை நடிகர்கள் நடிப்பில் சொதப்பி இருக்கிறார்கள். கதாநாயகனாக கே.பாக்யராஜும் வில்லனாக பி.ஜி.எஸ்ஸும் நன்றாகவே நடித்துள்ளனர்.

ஒரு பாதிரியார் சயின்டிஸ்ட் ஆக இருப்பது, தேவாலயத்துக்கு உள்ளேயே ரிசர்ச் லேப் அமைத்திருப்பது, அதில் தனது கண்டுபிடிப்பைப் பாதுகாத்து வைக்க அவர் செய்துள்ள உத்தி போன்ற திருப்பங்கள் ஈர்க்கும் அளவுக்கு, திரைக்கதை ஈர்க்கவில்லை. அதேநேரம், ‘டெலிபோர்ட்டேஷன்’ சாத்தியமானல், பெருந்தொற்று, போர் போன்ற காலங்களில் அது எவ்வாறு பயனளிக்கும் என்பதை ‘டேக் அவே’ மேசேஜ் ஆகக் கொடுத்திருப்பதும், ‘டெலிபோர்ட்டேஷன்’ கருவியை வி.எஃப்.எக்ஸ் மூலம் ஏற்றுக்கொள்ளும்படி சித்தரித்துள்ளதும் படத்தை பொழுதுபோக்குச் சித்திரமாக மாற்றியிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE