உண்மையை கேக்கக் கூடிய காதுகளை தேடிக்கொண்டே இருப்பேன் - ‘மாமன்னன்’ விழாவில் மாரி செல்வராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஒரு திரைப்படம் என்பது நான்கு நாட்களில் முடிந்துவிடுவது கிடையாது. ஆண்டுக்கணக்கில் திரைப்படங்கள் பேசும்" என ‘மாமன்னன்’ பட விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் 50 ஆவது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "நான் என்ன பேசப்போகிறேன் என்பதை உதயநிதி காண்காணிக்கிறார். இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். 'நாம் பாடிக்கொண்டிருப்பது பழைய பாடலாக இருக்கலாம். அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என் வயிற்றிலிருந்து குடலை உருவி, ஓரிழை யாழாக மாற்றி அதைத் தெருத்தெருவாக மீட்டிவருவேன். உண்மையை கேக்க கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன்" என்று தெரிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், "சந்தோசமாக உள்ளது. மாமன்னன் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதுக்கு மக்களே காரணம்" என்றார். அப்போது, நாங்குநேரி சம்பவதுக்கு சாதிய எண்ணம் கொண்ட திரைக்கலைஞர்கள் காரணம் என்று பேச்சு எழுகிறது என்று கேள்வி எழுப்பியதற்கு, "என்னுடைய மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எதையும் மக்கள் தீர்மானிப்பார்கள்" என்றார்.

தொடர்ந்து ரத்னவேலு கதாபாத்திரம் தவறாக கொண்டாடப்பட்டது குறித்த கேள்விக்கு, "தவறாக கொண்டாடியவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். எல்லா படைப்புகளும் உருவாக்கப்பட்டது மக்களிடம் கொண்டுச் சேர்க்கதான். மக்களிடம் படைப்புகள் எப்படி சென்றாலும் சரி. ஒரு திரைப்படம் என்பது நான்கு நாட்களில் முடிந்துவிடுவது கிடையாது. ஆண்டுக்கணக்கில் திரைப்படங்கள் பேசும். நான்கு நாட்களில் பேசப்படுவதை வைத்து முடிவு செய்ய முடியாது. படங்கள் பேசப்பட்டு கொண்டே இருக்கும். கதாப்பாத்திரங்கள் உருமாறும். நிறம் மாறும். இறுதியில் அந்த பாத்திரங்கள் அதன் நிலையை அடையும். படம் பார்க்க பார்க்க அதன் உண்மையை பேசும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE