“மாரி செல்வராஜின் ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன் இருந்தது; வலி இருந்தது” - ‘மாமன்னன்’ விழாவில் வடிவேலு

By செய்திப்பிரிவு

சென்னை: “படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன் இருந்தது; வலி இருந்தது” என ‘மாமன்னன்’ படம் குறித்து வடிவேலு நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் 50 ஆவது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, “நான் அதிகமாக நகைச்சுவை படங்களில் தான் நடித்திருக்கிறேன். மொத்த நகைச்சுவை படத்துக்கும், இந்த ஒற்றை படம் தான் பெரிய பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.

இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மாரிசெல்வராஜ் கதை சொல்லும்போதே அவரிடம் இருந்த பாசம், உணர்வு ஆகியவை கிட்டத்தட்ட 30 படங்களை இயக்கிய இயக்குநருக்கு இருந்ததை பார்த்தேன். இதை ஓகே சொல்ல வைத்ததற்கு உதயநிதி தான் காரணம். ஆனால் இது இப்படியான ஒரு வெற்றியை பெரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படத்தில் 6 காட்சிகள் என்னை தூங்கவிடவில்லை. மலை உச்சியில் நான் அழும் காட்சியை பார்த்து நானே கதறி அழுதேன். திரையில் நான் வேறொருவரை பார்த்து அழுதேன். நானும் உதய்நிதியும் வண்டியில் செல்லும் காட்சியில் இறுக்கத்தையும், வலியையும் உதய்நிதி சிறப்பாக கடத்தியிருப்பார்.

வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மனைவியின் காலை பிடித்து பேசியிருப்பேன். இந்தக் காட்சிக்கு பலரும் என்னை அழைத்து பாராட்டினார்கள். அந்த காட்சியை மாரிசெல்வராஜ் சிறப்பாக எழுதியிருப்பார். இன்னொரு காட்சி ஒன்று என் மனதை உருக்கியது. இறுதியில் வெற்றிப்பத்திரத்தை அதிவீரன் கையில் மாமன்னன் கொடுக்கும்போது அந்த உணர்வு கடத்தலை மாரி சிறப்பாக படமாக்கியிருந்தார்.

இதுபோன்ற இயக்குநர்கள் மென்மேலும் வளர்ந்து வரவேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஜீவன் இருந்தது; வலியிருந்தது. நிறைய நகைச்சுவை படங்களில் உதயநிதிஸ்டாலின் நடிக்க வேண்டும். இதுபோன்ற படத்தை உதயநிதியைப்போல யாரும் பண்ண முடியாது. இந்த மாதிரி ஒரு வெற்றி எனக்கு கிடைத்தது கிடையாது. இந்த வாய்ப்பை கொடுத்த ரெட்ஜெயண்ட்டுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE