மலைகிராம மக்களுக்காக சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த நடிகர் பாலா

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 12 மலைகிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக நகைச்சுவை நடிகர் பாலா, அவரது சொந்த நிதியில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், ஈரோடு எஸ்பி ஜவகர், ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். ஈரோடு மேயர் நாகரத்தினம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் பாலா, “ ஈரோடு மாவட்டம் கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமங்களில், 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மலை கிராமங்களைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் மற்றும் வன விலங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ, சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, 16 கி.மீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வர வேண்டும்.

இதையறிந்ததும், இவர்களுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் பணம் வாங்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அந்த பணத்தை சேர்த்து இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளேன். இதேபோல் ஆம்புலன்ஸ் வசதியின்றி இருக்கும் குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு 10 வாகனங்களை வாங்கித் தர முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE