பில்டப் ஃபார்முலா, மோசமான கிராஃபிக்ஸ்... - ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரவி தேஜா நடிக்கும் புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வம்சி இயக்கும் இப்படத்திற்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் ரவி தேஜாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக அமைந்துள்ளது. படம் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - ஆதாம் ஏவால் காலம் தொட்டு தெலுங்கு சினிமாவின் ஃபார்முலாவான பில்டப் ஃபார்முலாவை கன்னட கேஜிஎஃப் வேறு மாதிரி பயன்படுத்தி வெற்றி கண்டது. அப்படியான அதே பில்டப்பை மீண்டும் தெலுங்கு சினிமா கையிலெடுத்திருப்பதை டீசர் உறுதி செய்கிறது. ரவி தேஜா குறித்து தொடக்கத்தில், ‘சார் அவன் பக்கம் மட்டும் போயிடாதீங்க..’ என்ற ரேஞ்சுக்கு, ‘சார் நாகேஸ்வரராவுக்கு இருக்குற மூளைக்கு பாலிடிக்ஸ் பக்கம் போயிருந்தா பவர் சென்டர் ஆயிருப்பான்..’ என ஓவர் பில்ட் கொடுக்கப்படுகிறது.

அடுத்தடுத்து சில வன்முறை காட்சிகள். தொடர்ந்து மோசமான அவசர கதியில் படமாக்கப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள். அடுத்து, ‘புலி சிங்கக் குட்டி கூட பால் தான் குடிக்கும். ஆனா இவன் எட்டு வைக்கும்போதே மனுஷ ரத்தத்த...’ என்ற வசனம் வரும்போதே இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என தோன்றுகிறது. ஒப்பிட்டு பார்த்தால் சிறுவயது பில்டப்பை ஏற்றும் காட்சிகளுக்கான இந்த வசனம் கேஜிஎஃப்பை நினைவுபடுத்துகிறது. அதில் ஒரு சென்டிமென்ட் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதையும் சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது என்பதற்காக டீசரில் அதை வெட்டியிருக்கலாம் போல. மேலும் கிரிமினல்ஸின் பில்டப்பை ஏற்றுவதற்காகத்தான் அரசு அதிகாரிகளுக்கு அரசு ஊதியம் கொடுக்கிறதா என்ற கேள்வியை டீசர் உறுதி செய்கிறது. டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE