ஆக்‌ஷன் படங்கள்தான் பான் இந்தியா படமா? - ‘குஷி’ விஜய் தேவரகொண்டா கேள்வி

By செய்திப்பிரிவு

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம், குஷி. சச்சின் கெடகர், சரண்யா, முரளி சர்மா, லக்ஷ்மி, ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். செப். 1-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. விழாவில், செய்தியாளர்களிடம் விஜய் தேவரகொண்டா கூறியதாவது:

இந்தப் படம், திருமணம் குறித்தும், குடும்ப அமைப்பின் மதிப்பு குறித்தும் சுவாரசியமாகப் பேசுகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன், பான் இந்தியா முறையில் வெற்றிபெற்ற படங்கள் ஆக்‌ஷன் படங்களாகத்தான் இருக்கின்றன. இது காதல் படம்தானே? என்று கேட்கிறார்கள். காதல் என்பது எல்லோருக்குமான உணர்வுதான்.

அதனால் இந்தப் படமும் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும். திருமணம் பற்றி கேட்கிறார்கள். முன்பு, இந்த வார்த்தையை என் அருகில் உள்ளவர்கள் கூட சொல்லமாட்டார்கள். இப்போது அது பற்றி உரையாடுகிறேன். என் நண்பர்கள் திருமணம் செய்வது கண்டு மகிழ்கிறேன். என் சொந்த வாழ்க்கையிலும் திருமணம் அமையும் என்று நம்புகிறேன். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய அத்தியாயம் அது.

இதற்கு முன் நான் நடித்த ‘லைகர்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதற்கு முன்பும் நான் நடித்த படங்கள் தோல்வியைச் சந்தித்து இருக்கின்றன. படங்கள் ஓடாதபோது, அது காயத்தை ஏற்படுத்தும். ஆனால், அது என் ஓட்டத்தையும் வேகத்தையும் தடுக்காது. ராஷ்மிகா, சமந்தா ஆகியோருடன் நடித்ததில் உள்ள வித்தியாசம் பற்றி கேட்கிறார்கள்.

எந்த அழகான நடிகைகளுடனும் மகிழ்ச்சியாகவே நடிப்பேன். அதில் எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை. தமிழில் எனக்கு பல இயக்குநர்களைப் பிடிக்கும். இயக்குநர் வெற்றிமாறனின் ரசிகன் நான். பா.ரஞ்சித் படங்கள் பிடிக்கும். அருண் மாதேஷ்வரனின் ‘கேப்டன் மில்லர்’ படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு விஜய தேவரகொண்டா கூறினார்.

படத்தின் இயக்குநர் ஷிவா நிர்வாணா, இசை அமைப்பாளர் அப்துல் வஹாப், தயாரிப்பாளர்கள், நவின், ரவிசங்கர், ஒளிப்பதிவாளர் முரளி உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE