ஜெயிலர் Review: ரஜினி - நெல்சன் கூட்டணியில் அதகளமும் ‘அமைதி’யும்!

By செய்திப்பிரிவு

’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன் இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம்.

சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் (வசந்த் ரவி). சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்) எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் அர்ஜுனை கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனின் தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான முத்துவேல் பாண்டியன் (ரஜினி), தன் மகனுக்காக பழிவாங்கப் புறப்படுகிறார். பல கொலைகள், தேடுதல், சண்டைகளைக் கடந்து விநாயகனை அடையும் ரஜினியை வேறு ஒரு நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரிடம் தனக்கு தேவையான ஒரு வேலையை செய்ய சொல்கிறார் விநாயகன். அந்த வேலையை ரஜினி செய்து முடித்தாரா, இறுதியில் என்ன ஆனது என்பதே ‘ஜெயிலர்’ படத்தின் திரைக்கதை.

படம் தொடங்கியதுமே சிலை திருடும் கும்பல், கொடூர வில்லன், அவரைப் பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ் அதிகாரி என பரபரக்கிறது திரைக்கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் சாதுவான குடும்பத் தலைவராக அறிமுகம் ரஜினி கவர்கிறார். எந்தவித பஞ்ச் டயலாக்கோ, ஓபனிங் பாடலோ இல்லாமல் மகனுக்கும் பேரனுக்கும் ஷூ பாலிஷ் போடும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மகன் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க ஒவ்வொருவராக தேடிக் கொல்லும் காட்சிகள் தரமான ‘சம்பவங்கள்’.

சாதுவான முத்துவாக இருக்கும் ரஜினி, ’டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாற்றம் அடையும்போது அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. இங்கு தொடங்கும் ரஜினியின் ராஜ்ஜியம் படத்தின் கிளைமாக்ஸ் வரை எங்கும் தொய்வடையவில்லை. ஐந்து தசாப்தங்களாக ரஜினி தக்கவைத்திருக்கும் அந்த கரிஷ்மா அசாதாரணமானது. எந்தப் படங்களிலும் இல்லாத வகையில் பல இடங்களின் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் நடித்துள்ளார். குறிப்பாக, யோகிபாபு உடனான காட்சிகளில் ரஜினியை வைத்து அவர் அடிக்கும் கவுன்ட்டர்களை மற்ற பெரிய நடிகர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது கூட சந்தேகமே.

படத்தின் முதல் பாதி முழுவதுமே இயக்குநர் நெல்சன் அதகளம் செய்திருக்கிறார். யோகிபாபுவும் ரஜினியும் சேர்ந்து வரும் காட்சிகளில் தியேட்டர் முழுவதும் சிரிப்பலை. படம் முழுக்க வரும் டார்க் காமடி காட்சிகள் நன்றாக கைகொடுத்திருக்கிறது. படத்தின் இடைவேளைக் காட்சி ‘திரை தீப்பிடிக்கும்’ ரகம். ரஜினியின் உடல்மொழியில் ஏற்படும் மாற்றமும், அதுவரை அலட்சியமாக டீல் செய்து கொண்டிருக்கும் குடும்பம் கொடுக்கும் ரியாக்‌ஷனும் கூஸ்பம்ப்ஸ்-க்கு உத்தரவாதம். ஒரு ரஜினி ரசிகனுக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் முதல் பாதியில் நிறைவாக உள்ளன.

சமீபகாலமாக ஓரிரு படங்கள் தவிர்த்து தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்பதே. காரணம், முதல் பாதியே கிட்டத்தட்ட ஒரு முழு படம் போல எழுதப்பட்டு விடுகிறது. இடைவேளைக்கு முந்தைய காட்சி ஒரு க்ளைமாக்ஸ் போல அமைக்கப்படுவதால் அதற்கு பின்னால் வரும் காட்சிகளின் வீரியம் குறைந்து விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். இதில் ‘ஜெயிலர்’ படமும் தப்பவில்லை.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் எழுதப்பட்ட ‘வீக்’ ஆன திரைக்கதையால் காணாமல் போய்விடுகின்றன. கூடவே முதல் பாதியில் காமெடிக்கு உதவிய யோகிபாபுவும் காணாமல் போய்விடுகிறார். அதுவரை பழிவாங்கும் கதையாக போய்க் கொண்டிருக்கும் கதை, திடீரென ‘ஹெய்ஸ்ட்’ பாணிக்கு மாறுவது சுவாரஸ்யம் தரவில்லை. அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. முதல் பாதியில் அதகளமாக ஆர்ப்பரிக்க வைத்த காட்சியமைப்புகள், இரண்டாம் பாதியில், பார்க்கும் நம்மை அமைதியாக்கி விடுகின்றன.

முதல் பாதியில் பெரிதாக தெரியாத லாஜிக் குறைகள், திரைக்கதையின் பலவீனத்தால் இரண்டாம் பாதியில் அப்பட்டமாக தெரிகின்றன. உதாரணமாக, ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் கொல்லப்படுவது என்பது சாதாரண விஷயமா? ஆனால், படத்தில் குடும்பத்தினருக்கு தகவல் சொல்வதோடு போலீஸாரின் பணி முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ரஜினி இஷ்டத்துக்கு ஆட்களை போட்டுத் தள்ளுகிறார. தலையை ஒரே வீச்சில் துண்டிக்கிறார், தொண்டையில் கத்தியை இறக்குகிறார், ஸ்னைப்பர் மூலம் சுட்டுத் தள்ளுகிறார். ஆனால் படத்தில் அதையெல்லாம் போலீஸ் கண்டுகொள்வதே இல்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பு திகார் சிறையில் ஜெயிலர் ஆக ரஜினி இருந்ததாக காட்டுகிறார்கள். அதற்காக அவருக்கு இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ரவுடி எல்லாம் உதவுவதாக காட்சிகள் வைத்திருப்பது நெருடல். எனினும், அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியும், அதில் ‘டீ-ஏஜிங்’ தொழில்நுட்பம் மூலம் ரஜினியை ‘சிவாஜி’ பட தோற்றத்தில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே உதவியுள்ளதே தவிர கதைக்கு கிஞ்சித்தும் உதவவில்லை. க்ளைமாக்ஸில் ஆளுக்கு ஒரு ஸ்லோமோஷன் காட்சிகளைத் தவிர, 'காவாலா’ பாடலுக்காக மட்டுமே தமன்னா பயன்படுத்தப்பட்டுள்ளார். சுனில், தமன்னா வரும் காட்சிகள் போரிங் ரகம். அந்தக் காட்சிகளை நீக்கியிருந்தாலே இரண்டாம் பாதி சிறப்பாக வந்திருக்க சாத்தியங்கள் உள்ளன.

ரஜினிக்கு அடுத்து படத்தில் கவனம் ஈர்ப்பவர் வில்லனாக வரும் விநாயகன். ஆசிட் நிரம்பிய தொட்டிகளை ஆட்களை கொல்லும்போதும், ரஜினியின் கட்டளைக்கு இணங்கி ரம்யா கிருஷ்ணனிடம் பிச்சை எடுக்கும் காட்சிகளில் பவ்யம் காட்டியும் அப்ளாஸ் பெறுகிறார். ரம்யா கிருஷ்ணன், மிர்னா ஆகியோருக்கான காட்சிகள் குறைவு. ரஜினியின் பேரனாக வரும் மாஸ்டர் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார். வசந்த் ரவி முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாமல் வந்து செல்கிறார். மற்ற நெல்சன் படங்களில் நகைச்சுவை காட்சிகளில் பலம் சேர்க்கும் ரெடின் கிங்ஸ்லி இதில் அடக்கி வாசித்திருக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியில் குறை சொல்ல எதுவும் இல்லை. அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ட்ரெண்டிங். படத்தில் பாடல்களைத் தாண்டி பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

முன்பே குறிப்பிட்டதைப் போல முதல் பாதியில் சிறப்பான காட்சியமைப்புடன், மினி க்ளைமாக்ஸ் போன்ற ஒரு இடைவேளை கொடுத்த ‘ஹைப்’-பால் இரண்டாம் பாதியின் வீரியம் குறைந்துவிடுகிறது. முதல் பாதியின் விறுவிறுப்புக்கு ஏற்ப இரண்டாம் பாதியை சீராக்கி, தேவைற்ற காட்சிகளை கத்தரித்திருந்தால் ரஜினி - நெல்சன் இருவருக்குமே ஒரு நிறைவான ‘கம்பேக்’ ஆக இருந்திருக்கும். ஆனாலும், இருவருக்குமே மிக முக்கியமான கம்பேக்தான் இந்த ‘ஜெயிலர்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்