அதிகாலைக் காட்சி இல்லாத ரஜினியின் ‘ஜெயிலர்’ - முன்பதிவு எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. மேலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு அதிகாலை காட்சிகள் இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

ஆனால், அண்மையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான அஜித்தின் ‘துணிவு’ படத்தின் அதிகாலைக்காட்சியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அதிகாலைக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. சிம்புவின் ‘பத்து தல’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மாவீரன்’ என எந்த படங்களுக்கும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை. தமிழகத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

டிக்கெட் புக்கிங் எப்படி? - சென்னையை பொறுத்தவரை பிரதான திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. ஆங்காங்கே ஓரிரு இடங்கள் மட்டுமே காலியான உள்ளன. இதில் விதிவிலக்காக உதயம் திரையரங்கில் இரண்டு காட்சிகள் மட்டுமே ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளன. மற்ற காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் காலியாக உள்ளது.

சென்னையை சுற்றியுள்ள அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர் பகுதிகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் முழுமையாக இன்னும் விற்று தீரவில்லை. சென்னையில் உள்ள முக்கியமான மால்களில் முன்பதிவு அமோகமாக நடைபெற்றுள்ளது. முதல் நாளை தவிர்த்து மற்ற நாட்களுக்கான முன்பதிவு என்பது மால்களைத் தாண்டிய திரையரங்குகளில் இன்னும் முழுவீச்சில் முடியவில்லை. டிக்கெட் புக்கிங் செய்ய ஆசைப்படுவோருக்கு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. மேலும் உதயம் திரையரங்கில் மொத்தமாகவே டிக்கெட் விற்பனை மந்த நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE