காப்புரிமை தொடர்பாக மோதல்.. ‘சாவர்க்கர்’ படத்துக்கு சிக்கல்

By செய்திப்பிரிவு

மும்பை: ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் 100 சதவீத காப்புரிமை தனக்கு மட்டுமே சொந்தம் என்று அப்படத்தின் நடிகரும் இணை தயாரிப்பாளருமான ரன்தீப் ஹூடா தெரிவித்துள்ளார்.

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடிக்கும் இப்படத்தின் திரைக்கதையை ரன்தீப் உடன் உட்கார்ஷ் நைதானி என்பவரும் எழுதியுள்ளார். சாவர்க்கரின் 140-வது பிறந்தநாளின் போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், சந்தீப் சிங்கின் லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் 100 சதவீதம் தனக்கு மட்டுமே சொந்தம் என்று படத்தின் இயக்குநர் ரன்தீப் ஹூடாவின் வழக்கறிஞர் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உடல்,மன ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சவால்களையும் கடந்து தனி ஆளாக இப்படத்தை ரன்தீப் ஹூடா எடுத்து முடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ரன்தீப் ஹூடா தரப்பின் இந்த கருத்துக்கு இணை தயாரிப்பாளர்களான ஆனந்த் பண்டிட் மற்றும் சந்தீப் சிங் ஆகியோரின் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இப்படத்தை நாங்களும் இணைந்து தயாரித்துள்ளோம். படத்தின் காப்புரிமை தொடர்பாக ரன்தீப் ஹூடா வெளியிட்டுள்ள கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE