“விஜய் சாதாரண ஆள் இல்லை... ரஜினி அப்படி பேசியிருக்க மாட்டார்” - மிஷ்கின்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை மனதில் வைத்து ரஜினி அப்படிப் பேசியிருக்க மாட்டார்’ என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினியின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. கழுகு - காகம் குறித்து ரஜினி கூறிய குட்டிக் கதையும் வைரலானது. இதில் நடிகர் விஜய்யை மனதில் வைத்துதான் ரஜினி அப்படி பேசியதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இது குறித்து மிஷ்கின் கூறும்போது, “ரஜினியின் பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய மனிதர் கண்டிப்பாக அப்படி சொல்லியிருக்க மாட்டார். அதனைக் கேட்காமலேயே என்னால் உறுதியாக சொல்லமுடியும். அதேபோல விஜய்யும் சாதாரண ஆள் கிடையாது. அவரும் பெரிய ஆள்தான். விஜய்யை ரஜினிக்கே மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் இதனை வைத்து சண்டைப் போட்டுக் கொள்ளக் கூடாது. இது ஒரு குடும்பம். ரஜினி அதில் மூத்தவர், விஜய் இளையவர். அப்படித்தான் பார்க்க வேண்டும். வெளியில் இருப்பவர் இதனை வைத்து அடித்துக் கொள்ளக் கூடாது” என்று மிஷ்கின் கூறினார்.

தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ல் சென்னையில் நடைபெற்றது. நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE