பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயசுதா

By செய்திப்பிரிவு

தெலங்கானா: நடிகையும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயசுதா பாஜகவின் தெலங்கானா மாநில தலைவர் கிஷன் ரெட்டி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தமிழ் திரையுலகில் 1970-ம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வ ராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதன்பின் 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் நடிகை ஜெயசுதா சேர்ந்தார். இதன் பின் அந்த கட்சியில் இருந்து விலகி 2019-ம் ஆண்டு தேர்தலின் போது ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், அவர் கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் அவருக்கு தாயாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தெலங்கானவாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத்தலைவர் கிஷன் ரெட்டி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில பொறுப்பாளரான தருண் சுக் உடனிருந்தார். தெலங்கானவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஜெயசுதாவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என பாஜக தலைமை உறுதியளித்ததன் பேரில் அவர் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE