“ஒரு சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது” - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

By செய்திப்பிரிவு

சென்னை: “திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டது” என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திரைப்பட வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்து விட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர். ஒவ்வொரு படத்துக்கும், வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பு மாறுபடும். இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையும் உயர்கிறது அத்துடன் எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரையுலகம்.

அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இது ஒரு புதிய விதிமுறையாகும்போது வர்த்தகம் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்துக்கு உயரும் என்றும் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில், “ரஜினிக்கு 72 வயது ஆன போதிலும் தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கிறார்கள். அப்படி உங்களுக்கும் நின்றால்தான் நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார்” என கலாநிதி மாறன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE