ரஜினியின் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் பேசுபொருளான விஜய்!

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்தே அதிகம் பேசப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினியின் பேச்சைக் கேட்பதற்காக நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியத் தொடங்கினர். இந்த நிகழ்வுக்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்ட மேடை தயாராகியிருந்தது.

நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், “நடிகர் விஜயைப் போல ரஜினியும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். கேரவனுக்கு செல்லமாட்டார். வெயிலாக இருக்கிறதே என கூறினால் இங்கதான் உட்காரணும், இதுதான் நேச்சுரல் லைட் என்பார்” என பேசினார்.

நெல்சன் பேசுகையில், “ரஜினியை போய் பாருங்க. அவரு நிச்சயம் படம் நடிப்பார் என விஜய் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்” என்றார்.

ரஜினி பேசுகையில், “ஜெயிலர்’ அறிவிப்புக்கு பிறகுதான் விஜய்யின் பீஸ்ட் வெளியானது. நிறைய பேர் என்னிடம் நெல்சனுக்குதான் படம் கொடுக்க வேண்டுமா என யோசிக்க சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஓர் இயக்குநர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் கலாநிதிமாறன் பேசும்போதும், “நடிகர் விஜய் கூறியது போல ரஜினிக்கு அவரேதான் போட்டி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE