சென்னையில் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா: அலைமோதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’,'ஹூக்கும்’, ‘ஜூஜூபி’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்க உள்ளது. முன்னதாக இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான 1000 இலவச டிக்கெட்டுகளுக்கான லிங்க்-ஐ சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது. இந்த லிங்க் வெளியிடப்பட்ட 15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்களும் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இதனிடையே, ஓய்வுக்காக மாலத்தீவு சென்றிருந்த நடிகர் ரஜினி ஜூலை 26-ம் தேதி இரவு சென்னை வந்தடைந்தார். இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்கிறார். அவரைத் தவிர்த்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. மேலும், இதில் அனிருத்தின் லைவ் பர்ஃபாமென்ஸும், தமன்னாவின் நடனமும் இடம்பெறும் எனத் தெரிகிறது. தொடர்ந்து 7 மணிக்கு படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE