காலத்தால் அழியாத காவியம் ‘தில்லானா மோகனம்பாள்’ படத்துக்கு வயது 55 - மதுரையில் சில நினைவலைகள்

By என். சன்னாசி

மதுரை: நடிகர் திலகம் சிவாஜிக்கு பெருமை சேர்த்த திரைப்படம் மட்டுமின்றி அவரையும், அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பத்மினியையும் உச்சத்துக்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘தில்லானா மோகனம்பாள்’ இதே நாளில், கடந்த 1968 ஜூலை 27-ம் தேதி திரைக்கு வந்தது. 55 ஆண்டுகளை கடந்துள்ள இப்படம், மதுரை சிந்தாமணி தியேட்டரில் அன்றைக்கு திரையிடப்பட்டது. மதுரைக்கும், இப்படத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

சிவாஜிகணேசனுடன் மதுரையைச் சேர்ந்த சேதுராமன், பொன்னுச்சாமி சகோதரர்கள் படத்தில் நாதசுரம் வாசித்துள்ளனர். பாரம்பரிய கலைகளான நாதசுரம், நடனம் (ஆடல், பாடல்) ஆகியவற்றை உயர்த்தி பிடித்த படம் இது என மதுரையைச் சேர்ந்த திரை விமர்சகர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான கு.கணேசன் கூறுகிறார்.

அவர் மேலும், கூறியது, "கொத்தமங்கலம் சுப்பு என்பவர் எழுதிய ‘தில்லானா மோகனம்பாள் ’என்ற நாவலை தழுவிய இப் படத்தை நாகராஜன் என்பவர் இயக்கினார். இப்படத்துக்குப் பிறகே தமிழகத்தில் நாதசுரம், நடனம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டது மட்டுமின்றி இக்கலையின் பெருமையை மக்கள் உணர்ந்தனர். காலம் கடந்து இத்திரைப் படத்தை பேசுகிறோம் என்றால், பிரபல நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரம் பெயரில் சிவாஜியும், நாட்டிய பேரொளி என வர்ணிக்கப்பட்ட நடிகை பத்மினியும் நடித்துள்ளனர்.

வைத்தி என்ற பாத்திரத்தில் நகேஷ், ‘ஜில்ஜில்’ ரமா வேடத்தில் நடிகை மனோரமா டப்பாங்குத்து கலைஞராகவும் நடித்துள்ளார். மேலும், இப்படத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் மதுரை சேதுராமன்- பொன்னுச்சாமி சகோதாரர்கள். இவர்கள் சிவாஜியுடன் இணைந்து நாதசுரம் வாசிப்பது மிகவும் நேர்த்தியாக இருக்கும். இதன்மூலம் இவர்கள் புகழ் பெற்றனர். இப்படம் வெளியாகி 55வது ஆண்டு நிறைவு பெறுகிறது.

இப்படம் திரையிடப்பட்ட சிந்தாமணி தியேட்டர் தற்போது, வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது. இருப்பினும், அன்றைக்கு இந்தப் படம் அதிக நாள் ஓட்டியது மதுரையில்தான். இதன்படி, மதுரை சிந்தாமணியில் 131 நாட்களும், சென்னை சாந்தி கிரவுன் தியேட்டரில்-111 நாள், கோவை ராயலில் 103 நாள், கொழும்பு சென்ட்ரலில் 100 நாள் என ஓடியிருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத காவியமாக மட்டுமின்றி இயல், இசை, நாடக கலைகள் இருக்கும் வரை ‘தில்லானா மோகனம்பாள் ’ என்ற திரைப்படம் பேசப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE