Barbie திரை அனுபவம் | சிக்கலான சமூக அரசியலைப் பேசும் கலக்கல் படைப்பு!

By ஆ.மதுமிதா

கல்லூரி இரண்டாம் வருட வகுப்புகள் தொடக்கியதிலிருந்தே தோழிகள் அனைவரும் ‘பார்பி’யை பார்ப்பதா, ‘ஓப்பன்ஹைமர்’ படத்துக்குச் செல்வதா என விவாதம் செய்துகொண்டிருந்தபோது இரு படங்களுமே ரிலீஸ் ஆகிவிட்டன. 18+ சர்ச்சை இருந்ததால் பலரும் பார்பிக்கு ஓட்டுப்போட, முதலில் ‘பார்பி’ படம் பார்க்க நானும் என் நெருங்கிய தோழியும் மட்டும் கிளம்பினோம். பார்பி பொம்மைகளாகவே பிங்க் நிற ஆடை, ஆக்சஸரீஸுடன் சென்றோம். அவசரப்பட்டு சிறுபிள்ளைத்தனமாக அலங்கரித்துக் கொண்டு வந்து விட்டோமோ என யோசித்துக் கொண்டே திரையரங்கு உள்ள மாலுக்குள் நுழைந்தால் அங்கே சிறுபிள்ளைகளிலிருந்து அவர்களை அழைத்து வரும் பெற்றோர், தாத்தா - பாட்டி என அனைவருமே பார்பி லேண்ட் இன் சிப்பாய்களைப் போல பிங்க் நிற ஆடைகளில் அலங்காரமாக வந்திருந்தனர்.

கடந்த மாதம் வரையில் கூட ‘பெண் தானே... சாஃப்டா இருப்பானு நினைக்காத, நான் கொஞ்சம் ரக்கடான ஆளு’ என ரக்கடாக சுற்றிக் கொண்டிருந்த பிள்ளைகளைக் கூட ' ஐ ஆம் ஏ பார்பி கேர்ள்' பாட்டுக்கு சின்சியராக ரீல் செய்து கொண்டிருந்தனர். இதைவிட ஆச்சரியம், வழக்கமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதைப் பெரிதாக விரும்பாத தாத்தா - பாட்டிகள் கூட ஜோடியாக வந்திருந்தனர்.

2கே கிட்ஸ் சிறுவயதில் பார்த்த இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் மார்வல் சூப்பர் ஹீரோ படங்களை ஒரு 80ஸ் அல்லது 90ஸ் பசங்களைப் பார்க்க வைத்தால் பத்து நிமிடங்கள் மட்டுமே பிடி கொடுப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட 80ஸ் கிட்ஸையும் கூட திரையரங்குகளுக்கு இப்படம் வசீகரித்து வந்துள்ளது. இதற்கு காரணம், இப்படத்தின் பிரதானமான பார்பி பொம்மை அனைத்து வயது மக்களின் வாழ்விலும் ஏற்படுத்தியுள்ள தாக்கமோ எனத் தோன்றியது.

1959-ல் முதலில் விற்கப்பட்ட இந்த பார்பி பொம்மையை வைத்து விளையாடாத குழந்தையே இருந்திருக்க முடியாது. ஆண் பிள்ளைகளாவது வயதாக ஆக பார்பி பொம்மைகளுடன் விளையாட மாட்டார்கள். ஆனால் பெண் பிள்ளைகளுக்கு பார்பி பொம்மை இல்லாமல் விளையாட்டு நேரமே இருந்திருக்காது. ஏன் நீங்கள் கூட யாரேனும் தெரிந்தவர் குழந்தைக்கு பிறந்தநாள் என்றால் பார்பி பொம்மையை தான் முதலில் பரிசாக அளிக்க யோசிப்பீர்கள். இப்படி பார்பி பொம்மை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கமே இப்படத்தின் வெற்றியும் பார்பி பொம்மை நிறுவிய மேட்டல் (Mattel) நிறுவனத்தின் வெற்றியும் ஆகும்.

இந்த பிங்க் கலர் டப்பாவில், சீப்பு கண்ணாடி தோல்பை என அனைத்துடனும் கூடிய பார்பி பொம்மைதான் எனக்கு வேண்டும் என்று சிறுபிள்ளையில் அப்பாவுடன் வாதமிட்ட மலரும் நினைவுகளுடன் ஆசை பார்பியைக் காண அரங்குக்குள் சென்றேன்.

பேருக்கு ஏற்ற மாதிரியே பிளாஸ்டிக்கால் ஆன மனித அளவு பார்பி பொம்மைகளை கொண்ட ஊரே பார்பி லேண்ட். இந்த பார்பி லேண்டில் அதிபர் பார்பி, எழுத்தாளர் பார்பி, மருத்துவர் பார்பி என மேட்டல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து விதமான பார்பிகளும் வாழ்கின்றன. மனித அளவு கொண்ட இந்த பொம்மைகளுக்கு பசி, தூக்கம், சோர்வு ஏதும் கிடையாது. இந்த பார்பிகளுக்கு நடுவில் தான் படத்தின் கதாநாயகியான நம் ஸ்டீரியோ டிபிக்கல் பார்பியும் வாழ்கிறார். தூக்கம் என்றதே இல்லாமல் இரவில் படுத்து பகலில் எழுந்து அழகாக உடையை அணிந்து, பிளாஸ்டிக் பொம்மை சாப்பாட்டை சாப்பிடுவது போல் நடித்து பார்பி லேண்ட் முழுவதும் தன் காரில் சுற்றி வந்து மற்ற பார்பிகளுக்கு ஹாய் சொல்லிவிட்டு இரவில் பார்ட்டியில் அழகாக நடனமாடி திருப்பியும் மறுநாள் இதே செய்வதே நம் பார்பியின் வேலை.

இந்த பார்பியை தவிர, இந்த பார்பியை கவனிப்பதும் காதலிப்பதையும் மட்டுமே வேலையாக கொண்ட சில பெண் பொம்மைகளும் உண்டு. எவ்வித பிரச்சினையும் இல்லாமல் அழகாக போய்க் கொண்டிருக்கும் இந்த பார்பியின் பிளாஸ்டிக் வாழ்க்கையில் ஒரு செல்லில் விரிசல் ஏற்படுகிறது. திடீரென மனிதர்களைப் போல சோர்வடைவது, பயப்படுவது தன் பிளாஸ்டிக் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மனித உடலாக மாறுவது மற்றும் சாவை குறித்த சிந்தனைகள் வருவது என நம் பார்பிக்கு விசித்திரமான பிரச்சினைகள் எழுகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்கான காரணத்தை தேடி பார்பி லேண்டை விட்டு நிஜ உலகத்துக்கு பார்பியும் அவளது கெண்ணும் செய்யும் பயணம் தான் கதை. இப்படி ஒரு ஜாலியான கதையை அடிப்படையைக் கொண்டு பெண்ணியம் என்ற சிக்கலான ஒரு கான்செப்ட்டை அழகாகவும் நகைச்சுவையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லியுள்ளார் கதாசிரியர் கிரேட்டா கியர்விக்.

பார்பி பொம்மைகளின் வேலை 'பெண்கள் யாராக வேண்டுமானாலும் எந்த ஒரு வேலையும் செய்பவராகவும், தோற்றத்தில் பருமனாகவும் கூட இருக்கலாம்' என்பதை சிறு பிள்ளைகளிடமிருந்தே நிறுவுவதற்காக உருவாக்கப்பட்டது என்று நம்பும் பார்பிக்கு நிஜ உலகத்தில் தாங்கள் எதற்காக உருவாக்கப்பட்டோமோ அதற்கான பயன் அடையப்படவில்லை என்ற உண்மை தெரிந்து குழப்பம் அடைந்து அழும் காட்சியாக இருக்கட்டும் அல்லது மேட்டல் நிறுவனத்தில் இருந்து தப்பித்து சென்று பார்பி லேண்டில் கென் பொம்மைகளின் ஆட்சியின் கீழ் மாட்டிக் கொள்வதாக இருக்கட்டும்... இப்படத்தில் உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கோ நகைச்சுவை காட்சிகளுக்கோ பஞ்சமில்லை.

தன்னுடைய பெர்ஃபெக்ட் வாழ்க்கை தொலைந்து விடக் கூடாது என்ற போராட்டத்தில், நிஜ உலகில் உள்ள கசப்பான மனித வாழ்க்கையின் உண்மையை அறிந்து, பார்பி லேண்ட் என்பது பார்பி பொம்மைகளுக்கு மட்டுமல்ல கென் பொம்மைகளுக்கும் தான் என்பதை அனைவரையும் உணர வைத்து விடுகிறாள் பார்பி.

பார்பி லேண்டில் அனைத்து இரவுகளுமே பார்பி பொம்மைகளுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இல்லை கென் பொம்மைகளுக்கும் சொந்தமானது தான் பார்பி லேண்ட். அதேபோல் எந்த ஒரு கட்டத்திலும் பார்பி பொம்மைகளும் கென் பொம்மைகளுக்கு அடிமைகளாகவும் இருந்துவிட வேண்டாம் என்று பெண்ணியத்தையும், பாலின சமத்துவத்தையும் பார்பி லேண்டில் சில மனிதர்கள் உதவியுடன் பார்பி நிலைநாட்டுகிறாள்.

இது மட்டுமல்லாமல் நம் வாழ்வில் நாம் சந்திக்க நேரிடும் சிக்கலான பல கஷ்டங்களையும், உணர்வுகளையும் தன்னம்பிக்கையுடன் கடந்து வர வேண்டும் என்பதையும் நகைச்சுவையாக இப்படம் கூறுகிறது.

பெண்ணியம், பாலின சமத்துவம் மற்றும் மனித உணர்வுகள் போன்ற பல சிக்கலான பல சமூக அரசியல் விஷயங்களை பார்பி என்ற ஒரு சிறு பொம்மையின் கதையின் மூலம் அழகாக சொல்லி இருந்தாலும் படம் முடிந்த பிறகு எனக்குத் தோன்றியது ஒன்றுதான்...

வெறும் பிளாஸ்டிக் உலகில் தான் வாழும் பொய்யான "பர்ஃபெக்ட் இன் பிளாஸ்டிக்" வாழ்க்கையை கடக்க வெறும் பிளாஸ்டிக் பொம்மை இவ்வளவு பிரயாசைப்படுகிறது. ஆனால், அழகான ஓர் உலகில், அழகான ஒரு வாழ்க்கையை வாழ வாய்ப்பு இருந்தும், அதனை நின்று ரசிக்க நேரமில்லாமல் பிளாஸ்டிக் மனிதர்களாக நாம் ஏன் வாழ வேண்டும்?

இப்படத்தில் வரும் பார்பியை போல நாமும் சமூகத்தில் பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அளவுதான் செயல்களை செய்ய வேண்டும் என்பதில்லையே! சிறு சிறு அடிகளாக எடுத்து வைத்துக் கூட நம்மையும் நம் பிளாஸ்டிக் வாழ்க்கையையும் சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையையும் ஏன் மாற்ற முடியாது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்