‘கல்கி 2898 AD’ படக்குழுவை பாராட்டிய ராஜமவுலி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ க்ளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ள இயக்குநர் ராஜமவுலி படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘கல்கி 2898 AD’. ‘புராஜெக்ட் கே’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட இப்படத்தின் புதிய தலைப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் ‘கல்கி 2898 AD’ படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ள இயக்குநர் ராஜமவுலி படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாகி (நாக் அஸ்வின்) மற்றும் வைஜெயந்தி மூவிஸ் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஒரு நம்பத் தகுந்த எதிர்காலம் சார்ந்த திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் கடினமான பணி. அதனை நீங்கள் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். டார்லிங் (பிரபாஸ்) அட்டகாசமாக இருக்கிறார். ஒரே ஒரு கேள்வி மட்டும் எஞ்சியுள்ளது. ரிலீஸ் தேதி” என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE