கொலை Review: காட்சியமைப்புகள் சிறப்பு. ஆனால், த்ரில்லருக்கு அது மட்டும் போதுமா?

By கலிலுல்லா

பிரபல பாடகரும், மாடலுமான லைலா (மீனாக்‌ஷி சவுத்ரி) அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டு கிடக்கிறார். இது தொடர்பான வழக்கு காவல் துறையில் புதிதாக சேர்ந்த சந்தியாவிடம் (ரித்திகா சிங்) ஒப்படைக்கப்படுகிறது. சிக்கல் நிறைந்த வழக்கு என்பதால் விசாரணையில் தடுமாறும் சந்தியா தனது குருநாதரும், முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான விநாயக்கின் (விஜய் ஆண்டனி) உதவியை நாடுகிறார். ஆரம்பத்தில் மறுக்கும் அவர் பின்பு ஒப்புகொண்டு குற்றவாளியை துப்பறிகிறார். இறுதியில் மாடல் லைலாவை கொன்றது யார்? கொலைக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? - இதை சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையுடன் சொல்லும் படம் ‘கொலை’.

அட்டகாசமான காட்சி அமைப்புகளால் ஹாலிவுட் தரத்தில் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே குமார். அவரது எண்ணத்துக்கு தனது கேமரா லென்ஸ் வழியே உயிர் கொடுத்திருக்கிறார் சிவகுமார் விஜயன். ஷார்ட்ஸ் கம்போஸிங், லைட்டிங், கேமரா ஆங்கிள் என ஒளிப்பதிவு ஒருபுறமும் அதற்கேற்ற ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பு மறுபுறமும், இடையில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், கலை ஆக்கமும் படத்தின் தரத்தை கூட்டுகின்றன. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை கவனம் பெற்ற அளவில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இப்படியான தொழில்நுட்ப குழுவின் பலத்துடன் கொலையான பெண்ணின் குரலின் வழியே தொடங்குகிறது கதை.

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர்களின் சுவாரஸ்யமே அதன் திரைக்கதையைச் சுற்றி போடப்படும் இறுக்கமான முடிச்சுகளும், படம் நகரும்போது அதன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுதும். அப்படியாக போடப்பட்ட முடிச்சுகள் ஆரம்பத்தில் வலுவாக இருந்தாலும், துப்பறியும் தருணங்களின் அதன் இறுக்கம் தளர்ந்து சுவாரஸ்யமற்றிருப்பது படத்தின் பெரும் சிக்கல்.

தொடக்கத்தில் இந்த வழக்கு விசாரணையை துப்பறிய மறுக்கும் விஜய் ஆண்டனி பின்பு ஒப்புகொள்வதற்கான காரணமே ஏற்றுகொள்ளும்படியாக இல்லை. மேலும், அவருக்கான பின்கதை படத்துக்கு எந்த வகையிலும் உறுதுணையாக இல்லை. அப்படியிருக்கும்போது அதற்காக எழுதப்பட்ட காட்சிகள் நேரத்தை வீண்டித்து இழுக்கின்றன. ஒரு கதாபாத்திரத்தை அதற்குரிய நடிப்பில்லாமல் பெயரளவில் மட்டும் ஸ்பெஷல் சைல்டு என குறிப்பிடுவது, சீனர்களின் முக அமைப்பை கொண்ட ஒருவரை பணிப்பெண் என கூறி தமிழ் பேச வைத்திருப்பது, கதை நிகழும் இடம் குறித்து தெளிவில்லாமல் மாறிக்கொண்டேயிருப்பது கிஞ்சித்தும் நம்பகத்தன்மையை கூட்டவில்லை.

அதேபோல கொலைகாரனை விஜய் ஆண்டனி நெருங்கும் காட்சிகள் எந்த வித விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இல்லாமலிருப்பது பலவீனம். துப்பறியும் காட்சிகள் ஒருத்தரை மாற்றி ஒருத்தர் என தட்டையான விசாரணையாக நீள்கிறதே தவிர, அதில் ஆர்வமுட்டும்படியான எழுத்து இல்லாதது சோகம். மேலும் இறுதியில் கொலைகாரன் கொலைக்கு சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லாதது பலவீனம்.

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அலட்டல் இல்லாத தனது வழக்கமான நடிப்பால் கவனம் பெறுகிறார் விஜய் ஆண்டனி. சில எமோஷனல் காட்சிகளில் நடிப்பில் மெனக்கெட்டுள்ளார். ஸ்டைலிஷ் காவல் அதிகாரியாக ரித்திகா சிங்குக்கு நடிக்க பெரிய அளவில் வாய்ப்பில்லை என்றபோதிலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார். மீனாட்சி சவுத்ரியைச் சுற்றி நடக்கும் கதை என்பதால் உண்மையான மாடல் அழகியை தன் நடிப்பால் கண்முன் நிறுத்துகிறார். மாடலிங் துறையில் நிகழும் பிரச்சினைகளை தொட்டுச் செல்லும் படத்தில் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து நடித்திருப்பது பலம். ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மொத்தமாக, தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான காட்சியனுபவம் கொடுக்கும் படம் திரைக்கதையில் வலுவற்றும், சுவாரஸ்யமற்றும் இருப்பதால் பிரமாண்ட காட்சிகள் கொடுக்கும் அனுபவத்தை கன்டென்ட் கொடுக்கவில்லை. இதனால், திரையரங்குகளில் கொலையானது மாடலிங் அழகி மட்டுமல்ல...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE