அமைதியா இருப்பது கூட அநீதிதான்! - இயக்குநர் வசந்தபாலன்

By செ. ஏக்நாத்ராஜ்

வசந்தபாலன் இயக்கியிருக்கும் ‘அநீதி’ 21-ம் தேதி வெளியாகிறது. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லரும் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. படம் பற்றி இயக்குநர் வசந்தபாலனிடம் பேசினோம்.

எந்த ‘அநீதி’யை இந்தப் படம் பேசுது?

இங்க நீதிங்கறது வெவ்வேறு விதமாகத்தான் இருக்கு. வலியவனோட நீதி, நாம இன்னைக்குப் பார்க்கிற நீதி. அவன்தான் இந்தச் சட்டத்தை எழுதினான். எளியவர்கள் அதை கடைபிடிக்கிறாங்க. எளியவர்களோட குரல் ஓங்கி ஒலிக்கும்போது அது பரிசீலிக்கப்படும். முதல்ல எதிர்ப்பு வரும். உங்களுக்கு ஏன் நீதிங்கற கேள்வி வரும். இப்படி நமக்கான நீதியை பெறுவதற்கே நம்ம குரல் அநீதியா ஒலிச்சுட்டே இருக்கும். பொருளாதாரத்துல நமக்கு மேல இருக்கிறவனுக்கு நாம கும்பிடு போட்டுட்டே இருக்கோம். அவன் கீழ இருக்கிறவனை மிதிச்சுட்டே இருக்கிறான். இதுதானே நடக்குது. இந்தப்படம் எளியவர்களின் குரலா இந்த ஏற்றத் தாழ்வுகள்ல இருக்கிற சிக்கலை பேசுது.

‘இந்த படத்தை முதலாளிகள் பார்த்தா, தொழிலாளிகளை எப்படி நடத்தணும்னு தெரிஞ்சுக்குவாங்க’ன்னு இசை வெளியீட்டு விழாவுல பேசினாங்களே..?

ஆமா. உணவு விநியோகம் செய்ற தொழிலாளியின் மனநிலையில் இருந்து , அவன் கண்கள் வழியா இந்த உலகத்தைப் பார்க்கிறான். அவன் ஒரே இடத்தில் இருக்கிற ஆள் இல்லை. காலையில் இருந்து இரவு வரைச் சுத்திகிட்டே இருக்கிறவன்.வெவ்வேறு சந்து பொந்துகள்ல அவன் சந்திக்கிற மனிதர்கள், அவனை எப்படி நடத்துறாங்க, அவன் அவங்களை எப்படி எதிர்கொள்றான், அவனுக்கு என்னவெல்லாம் கிடைக்குதுன்னு கதை போகும்.

இந்த 'அநீதி'க்கான அடிப்படை எங்க தொடங்குச்சு?

ஒரு சாக்லெட் விளம்பரத்துல இருந்து! ஒரு நாள் டிவி பார்த்துக்கிட்டிருக்கும்போது அந்த சாக்லெட் விளம்பரம் வந்தது. ஒரு பாட்டி சேர்ல உட்கார்ந்து இருப்பாங்க. அவங்க கைத்தடி விழுந்துரும். எதிர்ல இருக்கிற பேரன்கிட்ட எடுத்துக் கொடுன்னு கேட்பாங்க. அவன் எடுக்காம சாக்லெட் சாப்பிட்டுட்டு இருப்பான். இப்ப அந்த பாட்டியே எழுந்து எடுப்பாங்க. இந்த நேரத்துல அவங்க உட்கார்ந்திருந்த இடத்துல மேல இருந்து ஒரு பொருள் விழுந்து சேர் உடையும். இப்ப அந்தப் பாட்டி, 'நல்லவேளைப்பா நீ எதுவும் பண்ணல'னு சொல்லும். இப்ப ‘எதுவும் செய்யாதீங்க, சாக்லெட் சாப்பிடுங்க’ன்னு சொல்வாங்க. இதைப் பார்த்ததும் கோபம் வந்தது. அடுத்த தலைமுறைக்கு என்ன கருத்தை சொல்றீங்க? பொறுப்பில்லாத ஒரு சமூகத்தை உருவாக்குகிறதுதான் திட்டமா? இந்த வியாபார உலகமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மனிதர்களை எப்படி பார்க்குதுங்கற கோபம்தான் இந்தப் படம் உருவாக காரணம். எல்லாருக்கும் இனிக்கிற சாக்லெட் ஒருத்தனுக்கு கசக்க ஆரம்பிச்சா என்னவாகும்னு நினைச்சதும் தொடங்குச்சு இந்தப் படம். இந்த விஷயம் விவாதிக்கப்படணும்னு நினைக்கிறேன். ஏன்னா அமைதியா இருக்கறது கூட அநீதிதான். சக மனிதன் சக மனிதனுக்கு அன்பு பாராட்டாம இழைக்கிறதும் அநீதிதான். 'லியோ'படத்துக்கு 'பிளடி ஸ்வீட்'டுன்னு கேப்ஷன் வச்சிருக்காங்க. அவங்க வைக்கலன்னா 'பிளடி சாக்லெட்'டுன்னு நான் வச்சிருப்பேன்.

அர்ஜுன் தாஸ் வில்லன் வேடங்கள்ல நடிச்சுட்டு இருந்தவர். அவரை கதாநாயகனாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

எனக்கு எப்போதும் நல்ல, வித்தியானமான நடிகர்கள் மேல ஆர்வம் இருக்கும். இதுக்கு முன்னால, நடிகர் பசுபதி வில்லனா நடிச்சுட்டு இருந்த காலத்துல ‘வெயில்' படத்துல நாயகத்தன்மைக் கொண்ட கதாபாத்திரத்துல நடிக்க வச்சேன். இந்தப் படத்தோட கதை, ஒரு கோபக்கார இளைஞனைப் பற்றியது. இந்தக் கதைக்கு அர்ஜுன் தாஸ் சரியா இருப்பார்னு நினைச்சேன். அது மட்டுமில்லாம ‘கைதி' படம் மூலமா பளிச்சுனு எல்லார் மனசுலயும் பதிஞ்சு போனவர். அந்த படத்துல அவர் ஹீரோவோடமோத கூட மாட்டார். ஆனா அவரின் வேகமான நடிப்பும் குரலும் ஈர்த்தது. அதிகமான பெண் ரசிகர்களை கொண்டவர் அவர். இதுல திருமேனிங்கற கேரக்டர்ல எளிமையான இளைஞனா, தன் கேரக்டரை உணர்ந்து சிறப்பா நடிச்சிருக்கார்.

நண்பர்களோடு சேர்ந்து நீங்களே தயாரிப்பாளர் ஆயிட்டீங்களே?

அது பெருங் கனவு. நான் ‘ஜென்டில்மேன்' படத்துல உதவி இயக்குநரா இருந்த நேரம். என் நண்பர் வரதராஜனும் நானும் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்து , அவர் படம் தயாரிக்கணும், நான் இயக்கணும்னு பேசினோம். 'அங்காடி தெரு' படம் முடிஞ்சதும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு கடன் வாங்கி பட பண்ண நினைச்சோம். அது முடியலை. கரோனா காலகட்டத்துல என் பழைய நண்பர்களோட தொடர்ந்து பேசிட்டிருந்தேன். அப்ப நண்பர்களா சேர்ந்து ஏன் தயாரிப்பு கம்பெனி ஆரம்பிக்கக் கூடாதுன்னு பேசினோம். 15 நண்பர்கள் சேர்ந்து ‘க்ரவுட் ஃபண்ட்’ல ஆரம்பிக்க முடிவு பண்ணினோம். அப்ப முருகன் ஞானவேல், கிருஷ்ணகுமார்னு ரெண்டு நண்பர்கள், நாங்களே பண்றோம்னு முன் வந்தாங்க. ரெண்டு பேரும் ஸ்கூல்ல என் கூட ஒண்ணா படிச்சவங்க. அப்படி தயாரிக்கப்பட்டதுதான் இந்தப் படம்.

இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை வழங்கறதுக்கு என்ன காரணம்?

முதல் படத் தயாரிப்பாளருக்கு இங்க இருக்கிற சில ரகசிய அறைகள் திறக்காது. அந்தக் கதவைத் தட்டி திறக்கறது ரொம்ப கஷ்டம். அதனால நான் தொழில் கற்ற குரு, ஷங்கர் சார்கிட்ட உதவி கேட்டேன். படம் பார்த்தார். பிடிச்சிருந்தது. சரி, அவர் நானே உதவறேன்னு வந்தார்.

நீங்க அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்குமார், இன்னைக்கு 100-வது படத்துக்கு இசை அமைக்க இருக்கார்...

இது அவரோட காலமா இருக்கு. தமிழ், தெலுங்கு, இந்தின்னு பிசியா இருக்கார். இசை அமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர்னு அவர் வளர்ச்சி சிறப்பா இருக்குது. இவர் திறமையானவர்னு எங்கயோ ஓர் இடத்துல கணிக்கிறோம். அவர் இப்படி வளர்ந்திருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. நாம நடற ஒரு செடி, வளர்ந்து பூப்பூத்து நிற்கிறதைப் பார்க்கும்போது சரியான விதையைதான் இந்த மண்ணுல ஊன்றியிருக்கோம்னு ஒரு சந்தோஷம் வரும்ல. அப்படி இருக்கு.

உங்க சித்தப்பாவுக்கு சமர்ப்பணம் பண்ற மாதிரி இந்தக் கதையில ஏதோ பண்ணியிருக்கீங்களாமே?

ஆமா. அவர் என் சின்ன வயசு ஹீரோ. அப்படி ஒரு மனிதரை பார்க்க முடியாது. அவர் பார்க்காத வேலையில்லை. என் அப்பாவை விட என் மேல அதிக அன்பு செலுத்திய மனிதர் அவர். சாதாரண ஆள்தான். எதுவும் இல்லாத எளிய மனிதர்கள் காட்டும் பேரன்பை அவர்கிட்டப் பார்த்தேன். ‘சாக்லெட்களால் என் பால்யத்தை நகர்த்திய என் சித்தப்பா பிரமநாயகத்துக்கு அஞ்சலி’னுதான் டைட்டில் கார்டுல போடறேன். அவரை நினைவுபடுத்தும் ஒரு கதாபாத்திரம் படத்துல இருக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்