சினிமாவுக்கு கிடைச்ச வரப்பிரசாதம் டிஜிட்டல்: ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி

By செ. ஏக்நாத்ராஜ்

அசைவுகளுடனும் ஒலிகளுடனும் பிம்பங்களை எழுதும் கலை, ஒளிப்பதிவு. கருவிகளின் வழி கனவை உருவாக்கும் சினிமாவில், ஒளிப்பதிவின் முக்கியத்துவம் அறிந்ததுதான். இந்தக் கலையுடன், தமிழ் சினிமாவில் 23 வருடங்களுக்கும் மேலாகப் பயணித்துக் கொண்டிருப்பவர், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி. தமிழில் முதன் முதலாக, டிஜிட்டல் கேமரா பயன்படுத்தப்பட்ட படத்தில் பணியாற்றியவர். அவரிடம் பேசினோம்.

டிஜிட்டல் தமிழ்ல அறிமுகமான ‘வானம் வசப்படும்’ படத்துல பணியாற்றியவர் நீங்க...

ஆமா. அந்தப் படத்துக்கு இயக்குநரும் ஒளிப் பதிவும் பி.சி.ஸ்ரீராம் சார்தான். 'கியூப்' நிறுவனம் டிஜிட்டல்ல ஒரு முயற்சி பண்ணலாம்னு வந்தாங்க. அப்ப டெக்னாலஜி அதிகம் வளராத காலகட்டம். பேனாசோனிக் நிறுவனம் 720பின்னு ஒரு கேமரா கொண்டு வந்திருந்தாங்க. இப்ப இருக்கிற டெக்னாலஜியை ஒப்பிட்டா, அது ரொம்ப ரொம்ப ஆரம்பக்கட்டம்.

இன்னைக்கு அதோட வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க?

நேஷனல் ஜியாக்ரபிக் இதழ்தான் புகைப்படங்கள்ல, சிறந்த தரத்தைக் கொடுப்பாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அவங்க 1998-லயே டிஜிட்டல் கேமராவை ஏத்துக்கிட்டாங்க. டிஜிட்டல்ல ஸ்டில் அப்பவே தரமா வந்திருச்சு. ஏன்னா அதுக்கு ஒரே ஒரு ஃபிரேம்தான். திரைப்படம்னு வரும்போது, ஒரு செகண்ட்ல 24 ஃபிரேம் பதிவு பண்ணணும். அதுக்கு இன்னும் கொஞ்சம் டெக்னாலஜி தேவைப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, 2012 வாக்குல தரமான டிஜிட்டல் கருவிகள் வந்திடுச்சு. இன்றைய காலகட்டத்துல, ஃபிலிமை விட ரொம்ப துல்லியமா எடுக்கிற டிஜிட்டல் கேமரா வந்தாச்சு. இன்னும் 10 வருஷத்துல வேற லெவல் போகும். டிஜிட்டல், சினிமாவுக்கு கிடைச்ச வரப்பிரசாதம்.

பெரும்பாலான அறிமுக இயக்குநர்களுக்கு நீங்கதான் அதிகம் பிடிச்ச ஒளிப்பதிவாளரா இருக்கீங்க... எப்படி?

நான் பொதுவா, கதை எனக்கு பிடிச்சிருக்கா, அந்த இயக்குநர் அந்தக் கதைக்கு நேர்மையா இருக்காரா? படத்தை, இந்த நிறுவனம் வெளியிடுவாங்களா?அப்படிங்கறதைதான் பார்க்கிறேன். இதை தாண்டி ஒரு இயக்குநர் முதல் படம் பண்ணும்போது அவருக்கு என்ன மாதிரியான நெருக்கடி இருக்கும்னு எனக்குத் தெரியும். ஒரு ஒளிப்பதிவாளரா என் வேலை, இயக்குநரோட தேவையை காட்சிப்படுத்தணுங்கறதுதான். என் விஷயங்களை அவங்கிட்ட திணிக்கறதுல உடன்பாடு இல்லை. ஆனா, ஒரு பெரிய தவறு நடந்தா, அதை அறிமுக இயக்குநருக்கு சுட்டிக் காட்டலாம். ரெண்டு மூனு நாள் கடந்தா, அவங்களுக்கே எது தப்பு, எது சரின்னு புரிஞ்சுரும். அதுமட்டுமில்லாம, அறிமுக இயக்குநர் கேட்கிற எல்லாமே தயாரிப்பு தரப்புல கிடைச்சிடாது. இப்ப, 300 பேர் இந்தக் காட்சிக்கு வேணும்னா, 100 பேர் போதும்னு கொடுப்பாங்க. அதை வச்சு காட்சிகளை எடுக்கணும். நான் அதை அட்ஜஸ்ட் பண்ணி எடுத்திருவேன். இதனால அறிமுக இயக்குநர்கள் என்னை சகஜமா உணர்றாங்கன்னு நினைக்கிறேன்.

‘தண்டட்டி’ போல பட்ஜெட் படங்களுக்கும் ஒளிப்பதிவு பண்றீங்க. ‘ஜீனி’ மாதிரி மெகா பட்ஜெட் படங்கள்லயும் வேலை பார்க்கிறீங்க... எப்படி?

அதான் முதல்லயே சொன்னேனே, நான் பட்ஜெட் பத்தி பார்க்கிறதில்லைன்னு. ‘தண்டட்டி’ மாதிரி படங்களுக்கு, முன் தயாரிப்பு வேலைகள் அதிகம் இருக்காது. அதனால இயக்குநர் சொல்றதை கேட்டுப் பண்ணிடலாம். இப்ப ஜெயம் ரவி நடிக்கிற ‘ஜீனி’ மாதிரி படங்களுக்கு நிறைய திட்டம் போட்டு வேலை பார்க்கணும். அந்தக் கதையும் களமும் அப்படி. அதுக்கு நேரமும் அதிகமாகத் தேவைப்படும். அதுக்கான நேரத்தைக் கொடுக்கணும்.

‘ஜீனி’ படத்துக்கு புதுசா என்ன பண்ண போறீங்க?

இது அழகான ஃபேன்டசி படம். ஆனா பீரியட் படம் இல்லை. இப்ப நடக்கிற கதைதான். இந்தப் படத்துக்காக ‘அலெக்ஸா 35’ங்கற கேமராவை பயன்படுத்தறேன். அது, ரொம்ப அட்வான்ஸான கேமரா. ஒரு தமிழ்ப் படத்தை சர்வதேச தரத்துல கொடுக்கிற படமா இது இருக்கும். வெறும் டெக்னிக்கல் விஷயத்துல மட்டுமல்ல. கதை சொல்ற உத்தியில இருந்து நிறைய விஷயங்களை இயக்குநர் அர்ஜுனன் புதுசா சொல்லப் போறார். கதையை கேட்டதுமே, ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிப்பா இசை அமைக்கிறேன்னு சொல்லிட்டார்னா பாருங்க.

இயக்குநர் மிஷ்கினோட ஆரம்பகால படங்கள்ல நீங்கதான் தொடர்ந்து ஒளிப்பதிவு பண்ணிட்டு இருந்தீங்க... பிறகு என்னாச்சு?

அவரோட முதல் 3 படங்களுக்கு நான்தான் ஒளிப்பதிவாளர். இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது. அவர் பெரிய படம் பண்றதுக்கான முயற்சியில இருந்தார். அது கைகூடாமலேயே இருந்தது. ஒரு ரெண்டு வருஷம் அப்படியே ஓடிடுச்சு. அப்பதான் வெளியில இருந்து வாய்ப்பு வந்தா, நீங்க போய் பண்ணுங்கன்னு சொன்னார் மிஷ்கின். அப்ப போய் பண்ணின படம்தான் பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’. அருள்நிதி ஹீரோவாக அறிமுகமான படம் அது. அந்த நேரத்துல மிஷ்கின் ‘யுத்தம் செய்’ ஆரம்பிச்சதும் என்னை கூப்பிட்டார். அப்ப பாண்டிராஜ் ஒரு விஷயம் சொன்னார், ‘சார், இதை விட்டுட்டு மிஷ்கின் படத்துக்கு நீங்க போகலைன்னாலும் அவருக்கு பிரச்சினையில்லை. ஆனா, அவர் யாருக்காவது வாய்ப்பு கொடுத்தார்னா, அவர் பெரிய ஒளிப்பதிவாளரா வருவார்’னு சொன்னார். அவர் சொன்னதுதான் நடந்தது. அப்ப ‘யுத்தம் செய்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன், இன்னைக்கு முக்கியமான ஒளிப்பதிவாளர்.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநரா மாறிவிட்டு வர்றாங்க. உங்களுக்கு அப்படி ஏதும் ஆசை இருக்கா?

எனக்கு ஸ்கிரிப்ட் பண்ணணும்ங்கற ஆசை இருக்கு. ஆனா டைரக்‌ஷனுக்கு வேற மனநிலை வேணும். அது பெரிய வேலை. அப்படியே பண்ணினாலும் குறும்படம் மாதிரி எதுவும் பண்ணலாம். இயக்குநர் ஆகறதுதான் நம்ம வளர்ச்சி அப்படிங்கற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. ஒளிப்பதிவிலேயே நம்மை தரத்தை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கு. அதை நோக்கித்தான் என் பயணம் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE