எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு சமரசத்துடன் வாழும் ஒருவனின் வாழ்க்கையை எங்கிருந்தோ கேட்கும் ‘அசரீரீ ஒலி’ மாற்றியமைத்து மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வைத்தால் அதுவே ‘மாவீரன்’ ஒன்லைன்.
கார்ட்டூனிஸ்ட்டான சத்யா (சிவகார்த்திகேயன்) தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். திடீரென ஒருநாள் அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது. மேலும், அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்து முறையிடும் தன் தாயிடம் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கோம்மா’ என சமரசம் செய்கிறார் பயந்த சுபாவம் கொண்ட சத்யா.
இதன் நீட்சியாக தனது குடும்பத்துக்கு மற்றொரு பாதிப்பு நேரும்போதும் கூட, அதையும் தட்டிகேட்க முடியாமல் தன்னையே நொந்துகொள்ளும் அவர் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது நேரும் விபத்தில் அவர் வரைந்த கார்டூன் கதாபாத்திரத்தின் குரல் ஒன்று அசரீரீயாய் ஒலிக்கிறது. அந்தக் குரல் கோழையான சத்யாவை எப்படி ‘மாவீரன்’ஆக மாற்றுகிறது என்பதே படத்தின் திரைக்கதை.
பெருநகர விரிவாக்கம், வளர்ச்சி என்ற பெயரில் குடிசைப் பகுதி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கு அந்நியமான புறநகர் பகுதிகளுக்கு தூக்கி அடிக்கும் அரசின் அவலப்போக்கை கருவாக எடுத்து அதனை சுவாரஸ்யமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். ‘மண்டேலா’ படத்தைப்போல இப்படத்திலும் அவரின் சமூகப் பொறுப்பு கவனிக்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கருவை ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமாவாக மாற்ற எழுதியிருக்கும் முற்பகுதி திரைக்கதை ரசிக்க வைக்கிறது.
» Chandrayaan 3 | “நம் கொடி உயரே பறக்கட்டும்” - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து
அதற்கு மிக முக்கியமான காரணம் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கான படிப்படியான உருமாற்றமும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரும். கூடவே யோகிபாபுவின் டைமிங் காமெடிங்கள் நிறைய இடங்களில் கைகொடுப்பது பலம். வடமாநில தொழிலாளர்களால் தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யோகிபாபு கதாபாத்திரம் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது இன்னும் கூர்மையாக அணுகப்பட வேண்டிய அரசியல். தவிர, அமைச்சரான மிஷ்கினை சாமானியனான சிவகார்த்திகேயன் தனது அப்பாவித்தனங்களுடன் எதிர்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
அதுவரை பயந்த சுபாவம் கொண்ட நாயகன் கதாபாத்திரத்தை மாவீரனாக மாற்றி மக்களுக்கான பிரச்சினைகளுக்கு துணை நிற்க வைக்கும் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் ஏகப்பட்ட சமரசம் செய்திருக்கிறார் இயக்குநர். தேவையற்ற சண்டைக்காட்சிகளால் நாயகனுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் வில்லன் கதாபாத்திரத்தை பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக ‘மீட்பர்’, ‘தியாகி’ என்ற அடைப்புக்களுக்குள் நாயகனை அடைத்து புனிதப்படுத்த வைக்கப்பட்டுள்ள ‘க்ளிஷே’ க்ளைமாக்ஸ் பார்த்து புளித்தவை. அதைப் பின்தொடர்ந்து வரும் சில காட்சிகள் தேவையற்றவையாகவே கருதலாம்.
விளிம்பு நிலை மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததற்கு சிவகார்த்திகேயனை பாராட்டலாம். தனது வழக்கமான காதல், ரொமான்ஸ், இளைஞர்களை கவரும் ஜாலியான ‘டான்’ கதாபாத்திரங்களிலிருந்து விலகி கன்டென்டை நோக்கி நகரும் அவரின் முதிர்ச்சி கவனிக்க வைக்கிறது. அப்பாவியான பயந்த சுபாவமுள்ள இளைஞனாக அவரது நடிப்பு ஈர்க்கிறது. அதிதி சங்கரை இரண்டாம் பாதிக்கு மேல் எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. முதல் பாதியில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
அடித்தட்டு மக்களில் ஒருவராக யதார்த்த நடிப்பில் கவனம் பெறுகிறார் சரிதா. அரசியல்வாதியாக பொருந்திப் போகும் மிஸ்கின் கோவப்பட்டும் கத்தும் இடங்களில் ‘சவரக்கத்தி’ பட கதாபாத்திரத்தை பிரதிபலிக்காமலில்லை. அசால்ட்டாக டைமிங்கில் ஸ்கோர் செய்யும் யோகிபாபுவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதேசமயம் சுனில் கதாபாத்திரம் வீண்டிக்கப்பட்டுள்ளது. தங்கையாக மோனிஷா நடிப்பில் குறைவைக்கவில்லை.
பிற்பகுதியில் வரும் லைட்டிங் செட் அப், சிவாவுக்கும் மிஸ்கினுக்குமான லோ ஆங்கிள் ஷாட், அடுக்குமாடி குடியிருப்பை காட்சிப்படுத்தியிருந்த விதம் என விது அய்யனாவின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. பரத் ஷங்கரின் இசையில் ‘சீன் ஆ..சீன் ஆ..’, ‘வண்ணார பேட்டையில’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை சண்டைக்காட்சிகளில் தனித்து தெரிகிறது. அருண் வெஞ்சாரமூடு மற்றும் குமார் கங்கப்பனின் உழைப்பு திரையில் பிரதிபலிக்கிறது.
மொத்தத்தில் அழுத்தமான கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் அணுக முயற்சித்த ‘மாவீரன்’ சில சமரசங்களுக்குள் சிக்கிக்கொண்டதால், படத்தின் முற்பகுதி போல பிற்பகுதியில் போதிய பாய்ச்சலை நிகழ்த்தவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago