‘மாவீரன் என் வழக்கமான படமாக இருக்காது’ - சிவகார்த்திகேயன்

By செ. ஏக்நாத்ராஜ்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, வரும் 14-ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தை ‘மண்டேலா’ மடோன் அஸ்வின் இயக்கி இருக்கிறார். சரிதா, அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். டிரெய்லரும் பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சிவகார்த்திகேயனிடம் பேசினோம்.

“‘மண்டேலா’ பார்த்ததும் ரொம்ப பிடிச்சிருந்தது. எளிய மக்களோட வாழ்க்கையையும் வலியையும் சொல்லிட்டு, அதுக்குள்ள அரசியல் நையாண்டியை வச்சது ரொம்ப அருமையா இருந்தது. எவ்வளவு சமூக அக்கறை அதுல இருந்ததோ அதே அளவு பொழுதுபோக்கு விஷயமும் இருந்தது. எல்லோருக்குமே அந்தப் படம் பிடிச்சிருந்தது. பார்த்ததுமே இவரோட ஒரு படம் பண்ணணும்னு தோணுச்சு. அப்ப அவர்ட்ட பேசினப்ப சொன்ன கதைதான், மாவீரன்” என்கிறார் சிவகார்த்திகேயன்.

படத்துல நீங்க காமிக் ஆர்ட்டிஸ்டா வர்றீங்களாமே? - கன்னித்தீவு மாதிரி ‘மாவீரன்’ அப்படிங்கற காமிக்கை வரையும் ஆர்ட்டிஸ்டா வர்றேன். அதனால தான் ‘மாவீரன்’ அப்படிங்கற தலைப்பு. படத்துல என் பெயர் சத்யா. ஏன் அவனை மாவீரன்னு சொல்றோம்னு கதை போகும் .

ஃபேன்டசி கதை. ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் இருக்கு. படத்துல கருத்துன்னு எதுவும் இருக்காது. ஆனா, சமூக அக்கறையோட சில விஷயங்கள் இருக்கும். அது படம் பார்த்துட்டு வரும்போது புரியும். இது வழக்கமான என் படங்கள் போலவும் இருக்காது.

அதிதி ஷங்கர்? - அதிதி, பத்திரிகையில வேலை பார்க்கிறவங்களா வர்றாங்க. அவங்க நிஜத்துல எப்போதும் ஜாலியா இருப்பாங்க. செட்ல எல்லோருக்குமே இது தெரியும். ஆனா, கதையில அதுக்கு நேர் மாறான கேரக்டர். மெச்சூர்டான கதாபாத்திரம். இயக்குநர் என்ன சொல்றாரோ, அதை சரியா பண்ணிடுவாங்க.

நடிகர் அப்படிங்கறதைத் தாண்டி, மிஷ்கின் இயக்குநர். அவரோட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது? - மேடையில, பத்திரிகைகள்ல பார்த்த மிஷ்கின் சார்தான் நமக்கு தெரியும். அவர் படங்களும் தெரியும். அவர்ட்ட எப்படி பேசணும், பழகணும்னு முதல்ல தயக்கம் இருந்தது. ஆனா ஷூட்டிங் ஸ்பாட்ல அந்த தயக்கத்தை உடைச்சார். எத்தனை முறை ‘ஒன்மோர்’ கேட்டாலும் சோர்வடையாம பண்ணுவார். குறிப்பா ஆக்‌ஷன் காட்சிகள்ல, ஓர் இயக்குநர் அந்தளவு இறங்கி பண்ணணும்னா கஷ்டம்.

ஒரு நாள், 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஸ்பாட்ல இருந்தாங்க. திடீர்னு மைக்கை வாங்கி, ‘எல்லாருமே ரொம்ப நல்லா பண்றீங்க. உங்கிட்ட விஷயத்தை சரியா சொல்லி, இந்த உதவி இயக்குநர் சரியா வேலை வாங்குறான். ஒரு நாள் பெரிய இயக்குநரா இவன் வருவான். அவனுக்கு எல்லோரும் கைதட்டுங்க’ன்னு சொன்னார். கைதட்டினோம். அந்த உதவி இயக்குநர் கண்கலங்கிட்டார். இதுதான் மிஷ்கின் சார். இதை நான் ரொம்ப ரசிச்சேன்.

ஆக்‌ஷனுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கறதா சொல்றாங்களே? - அதிகம்னு சொல்ல முடியாது. நாலு சண்டைக் காட்சிகள் இருக்கு. ஆக்‌ஷன் காட்சிகள்ல நடிக்கணும்னா முதல்ல பயம் இருக்கும். சரியா பண்ணணுங்கற பயம் அது. இந்தப் படத்துல இன்னும் அதிகமா முயற்சி செஞ்சிருக்கேன். ரிஸ்க் எடுத்திருக்கேன். எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.

‘உங்களை பாத்தா ரஜினி ஞாபகத்துக்கு வர்றார்’னு நடிகை சரிதா சொல்லியிருக்காங்களே? - சரிதா மேடம், ரஜினி சாரோட நடிக்கும்போது அவர்ட்ட இருந்த எனர்ஜியை, எங்கிட்ட பார்த்ததா சொன்னாங்க. இந்த ஹேர்ஸ்டைலை பத்தியும் சொல்வாங்க. மிஷ்கின் சார் சொல்லும்போது, ‘ரஜினி ரொம்ப எளிமையா இருப்பார்னு சொல்வாங்க. அதை சிவகார்த்திகேயன்கிட்ட பார்த்தேன்’னு சொன்னார். இப்ப, பாடிபில்டர்னா உதாரணத்துக்கு அர்னால்டை சொல்வோம். உடனே அவர் ஆயிட முடியுமா? உதாரணத்துக்காக அவங்க அப்படி சொல்றாங்க. அவ்வளவுதான்.

இயக்குநர் மடோன் அஸ்வினோட பணியாற்றிய அனுபவம்? - ‘மடோன் அஸ்வின் முதல் பெஞ்ச் மாணவன். அப்படித்தான் படமும் பண்ணுவார்’னு அவர் நண்பர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முறை சொன்னார். ஆனா, ஸ்பாட்ல பார்த்தப்பதான் அவர் முதல் பெஞ்ச் மாணவன் இல்லை, ஹெட்மாஸ்டர்னு தெரிஞ்சுது. அதாவது ரொம்ப கண்டிப்பானவர். என்ன வேணுமோ அதை, சரியா வாங்கிருவார்.

நீங்க தேர்வு பண்ற இயக்குநர்கள், அறிமுக இயக்குநராகவோ, ஒரு படம் பண்ணினவங்களாகவோ இருக்காங்களே... என்னை நான் வெளிப்படுத்தணும்னா, புதுசு புதுசா ஐடியா வச்சிருக்கிற இயக்குநர்களை பார்த்துதான் நடிக்கணும். நான் காமெடி மட்டும் பண்ணிட்டு சினிமாவுக்கு வந்திருக்கேன். தொடர்ந்து அதை மட்டுமே பண்ணிட்டு இருக்க முடியாது. அது கஷ்டமும் கூட. இந்தப் படத்துல என்னோட வழக்கமான எதுவும் இருக்காது. அதுமட்டுமில்லாம பெரிய இயக்குநர்கள் இப்பதான் என்னை தேடி வர்றாங்க.

இந்திக்குப் போறதா தகவல் வருதே? - இல்லை. ‘மாவீரன்’ தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சியில நடிகர் அத்வி சேத் கலந்துகிட்டார். அவர் என்கிட்ட பேசும்போது, இப்ப கமல் சார் தயாரிப்புல பண்ணிட்டிருக்கிற படம் பற்றி கேட்டார். அது இந்தியில ரிலீஸ் ஆகுதான்னு கேட்டார். அதுக்கான முயற்சியில இருக்காங்கன்னு சொன்னேன். அதைதான் ‘நான் பாலிவுட்ல நடிக்கிறேன்’னு சொல்லிட்டார். அதை நேரடி இந்தி படத்துல நடிக்கிறதா செய்தியாக்கிட்டாங்க. அவ்வளவுதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE