'மாமன்னன்' 9 நாட்களில் ரூ.52 கோடி வசூல்: உதயநிதி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: “மாமன்னன் திரைப்படம் 9 நாட்களில் ரூ.52 கோடியை வசூலித்துள்ளது. என்னுடைய படங்களிலேயே அதிக கலெக்‌ஷன் வசூலித்த படம் இதுதான்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “என்னுடைய முதல் படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பெரிய வெற்றி பெற்றது. என்னுடைய கடைசி படமான ‘மாமன்னன்’ படத்துக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்து வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் 510 திரைகளில் படத்தை வெளியிட்டோம். தற்போது இரண்டாவது வாரத்தில் படம் 470 திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு இப்படியான வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.

படத்தின் இடைவேளை சண்டைக்காட்சியை 4 நாட்கள் எடுத்தோம். நிறைய அனுபவங்கள் கிடைத்தது. பூந்தொட்டி எடுத்து மேலிருக்கும் போர்டு ஒன்றை அடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது பூந்தொட்டியால் நாகராஜ் என்பவர் தலையில் அடிபட்டு என் கண் முன்னே அவர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார். உடனே மருத்துவமனையில் அனுமதித்தோம். இப்படி நிறைய சம்பவங்கள் உண்டு.

முதல் 8 நாள் ஷூட்டிங்கில் மாரி செல்வராஜ் என்ன எடுக்கிறார் என்பதே தெரியவில்லை. முதல் 15 நாட்கள் ஷூட் முடித்து பார்த்தபோதுதான் என்ன எடுக்கிறார் என்பது புரிந்தது. வடிவேலுவின் ப்ளாஷ்பேக் போர்ஷன் அது. அதை பார்த்தபின் அவரை கட்டியணைத்தேன். மலைமேல் அவர் அழும் காட்சியைப் பார்த்து அழாதவர்கள் யாருமில்லை.

வடிவேலுதான் அப்பா என கூறும்போது ஷாக் ஆனேன். பிறகு மாரி செல்வராஜ் ‘வடிவேலு பண்ணவில்லை என்றால் இந்தப் படமே வேண்டாம். வேறுபடம் எடுப்போம்’ என்றார். மாரி செல்வராஜிடம் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் படத்தை கொடுத்தேனோ, அதை பூர்த்தி செய்திருக்கிறார். படம் 9 நாட்களில் ரூ.52 கோடியை படம் வசூலித்துள்ளது. என்னுடைய படங்களிலேயே இதுதான் அதிக கலெக்‌ஷன் வசூலித்த படம்” என்று உதயநிதி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE