திரை விமர்சனம்: பம்பர்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் 3 நண்பர்களுடன் சேர்ந்து சில்லறைக் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார் புலிப்பாண்டி (வெற்றி). இச்சமயத்தில் புதிதாக அங்கே பொறுப்பேற்கும் மாவட்ட காவல் அதிகாரி (அருவி மதன்), கிரிமினல்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க, புலிப்பாண்டியும் அவர் சகாக்களும் ஐயப்பனுக்கு மாலை போட்டு கேரளாவுக்கு செல்கின்றனர். அங்கே இஸ்மாயில் என்கிற லாட்டரி சீட்டு விற்கும் முதியவரிடம் கேரள மாநில அரசின் கிறிஸ்மஸ் பம்பர் குலுக்கல் சீட்டு ஒன்றை வாங்குகிறார் புலிப்பாண்டி. அதை தவறுதலாக அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட, அதை விற்ற இஸ்மாயில் பத்திரமாக எடுத்து வைக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டமாக அந்தச் சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு விழுகிறது. நேர்மை தவறாத இஸ்மாயில், அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு, புலிப்பாண்டியிடம் கொடுக்க தூத்துக்குடி வருகிறார். அவர் புலிப்பாண்டியைச் சந்தித்தாரா? பரிசுத் தொகைச் சென்று சேர்ந்ததா? புலிப்பாண்டி–இஸ்மாயில் வாழ்க்கையை அந்த பம்பர் பரிசு எப்படியெல்லாம் புரட்டிப் போட்டது என்பதுதான் கதை.

காசுக்காக, காந்தி ஜெயந்தி அன்று கூட கள்ள மார்க்கெட்டில் மது விற்கும் அளவுக்கு கீழிறங்கும் 420 புலிப்பாண்டி கதாபாத்திரம், ஏன் அப்படி ஆனது என்பதை அழுத்தமாக வார்த்திருக்கிறார் இயக்குநர் செல்வகுமார். புலிப்பாண்டி, அவர் நண்பர்களோடு கூட்டுக் களவாணியாக இருக்கும் உள்ளூர் காவல் நிலைய ஏட்டுக்கும் (கவிதா பாரதி) இடையிலான இணக்கமும் முரண்களும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் கதையோட்டத்துடன் ஒன்றி பயணிக்க முடிகிறது.

மதம், இனம், மொழி கடந்த மனிதம், அதன் வேராக இருக்கும் அறம் ஆகியவற்றை இறுதிவரைப் பற்றிக்கொண்டிருக்கும் இஸ்மாயில் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் புறவுலகச் சிக்கல்கள் பதற வைக்கின்றன. கதையின் நாயகன் புலிப்பாண்டியா–இஸ்மாயிலா என்கிற சந்தேகம் எழும் அளவுக்கு நகரும் இரண்டாம் பாதியை இழுக்காமல் சட்டென்று முடித்துவிடுவது சிறப்பு.

புலிப்பாண்டியாக வெற்றியின் நடிப்பு தரம். அவர் நண்பர்களாக வருபவர்களையும் குறை சொல்ல முடியாது. புலிப்பாண்டியின் மாமன் மகளாக வரும் ஷிவானி நாராயணன், தனக்கு இயல்பாக நடிக்க வரும் என்பதைக் காட்டியிருக்கிறார். தமிழில் ஒரு டஜன் படங்களுக்குமேல் வில்லனாக பயமுறுத்திய அவரா இவர் என வியக்க வைத்திருக்கிறார், இஸ்மாயிலாக வாழ்ந்து காட்டியிருக்கும் ஹரீஷ் பெரேடி.

ஓர் அசலான கதை, அதில் ரத்தமும் சதையுமான கதாபாத்திரங்கள், ஆராவாரம் இல்லாத திரைக்கதை, அலங்காரம் இல்லாத உரையாடல் ஆகியவற்றோடு கோவிந்த் வசந்தாவின் உணர்வு பூர்வமான இசையும்–அதில் கார்த்திக் நேத்தாவின் ரசமான வரிகளும் சேர்ந்துகொண்டதில் சிலுசிலுவென குளிர்ந்த தென்றாக வீசுகிறது இந்த ‘பம்பர்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE