“அவரைப் பார்த்தபோது நடுங்கினேன்” - கமல்ஹாசனை சந்தித்த ‘2018’ இயக்குநர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“அவரை நேரில் பார்த்தபோது நடுங்கிப்போனேன்” என நடிகர் கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில், “நான் ஒரு இயக்குநர், நடிகர், சினிமா ப்ரியர் என அழைக்கப்படுகிறேன் என்றால், அதுக்கு காரணம் பல்வேறு திறமைகளைக் கொண்ட ஜீனியஸ் கமல்ஹாசன்தான். திரையிலும் வெளியேயும் இந்த மனிதனின் மேஜிக்கைப் பார்த்து வளர ஆரம்பித்தேன். சினிமாவின் என்சைக்லோபீடியாவை நேரில் சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். இதுவரை என் வாழ்நாளில் நடந்த மிகச் சிறந்த விஷயம் இதுதான். ஃபேன்பாய் தருணம் இது. அவரை நேரில் பார்த்தபோது உண்மையில் நடுங்கித்தான் போனேன். லவ் யூ சார்” என பதிவிட்டுள்ளார்.

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மலையாளத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது இப்படம். இதைத் தொடர்ந்து இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கும் புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE