‘மாஸ்’களைத் தாண்டி அறிமுக இயக்குநர்கள் ஆதிக்கம்: 2023-ன் முதல் பாதியில் தமிழ் சினிமா சாதித்தது என்ன?

By கலிலுல்லா

2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. காரணம், மாறிவரும் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளன. ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என்ற கூற்றுக்கிணங்க பழைய கதைகளைக் கொண்டு தேங்கிவிடாமல் தன்னை தகவமைத்துக்கொண்டு தமிழ் சினிமா அடுத்தக்கட்ட பாய்ச்சலை நோக்கி நகர்ந்து வருகிறது. தேக்கத்திலிருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக்கொள்ள பாலிவுட் போராடி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மலையாள சினிமாவும், தெலுங்கு சினிமாவும் அதன் போக்கில் கதைகளை கட்டமைக்க, தமிழ் சினிமா பெருங்கதையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் கலக்கிய படங்கள்: இந்த ஆண்டின் முதல் பாதியில் முத்தாய்ப்பான பல விஷயங்கள் கோலிவுட்டில் சாத்தியமாகியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் ‘லவ் டுடே’ கொடுத்த நம்பிக்கையை பற்றிப்பிடித்துக் கொண்ட இயக்குநர்கள் அந்த ஃபார்முலாவை நேர்த்தியாக பின்பற்றியுள்ளன. ‘குறைந்த பட்ஜெட்+ நல்ல கன்டென்ட் = அதிக லாபம்’. அடிப்படையில் இது மலையாள சினிமாவின் சூத்திரம். அதை தமிழ் சினிமா இயக்குநர்கள் குறிப்பாக புதுமுக இயக்குநர்கள் தமிழில் சாத்தியப்படுத்தியுள்ளனர். அப்படிப் பார்க்கும்போது அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபுவின் ‘டாடா’ முக்கியமானதொரு தொடக்கத்தை கொடுத்தது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் ரூ.30 கோடியைத் தாண்டி வசூலித்ததது. மந்திர மூர்த்தியின் ‘அயோத்தி’ மதநல்லிணக்கத்தை பேசிய விதம் சிலிர்க்க வைத்தது.

தரணி ராசேந்திரனின் ‘யாத்திசை’ குறைந்த பட்ஜெட்டுக்கும் பிரமாண்டத்தை காட்ட முடியும் என நிரூபித்தது. ‘பிச்சைக்காரன் 2’ படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடினர். ‘குட் நைட்’ கன்டென்டின் முக்கியத்துவத்தை பறைசாற்றியது. ‘போர் தொழில்’ ரூ.50 கோடி வசூலித்து மிரட்டியது. ‘தண்டட்டி’ படமும் அதன் கதைக்களத்தால் கவனம் ஈர்த்தது. இந்த புதுஃபார்முலாவை சாத்தியப்படுத்தியவர்கள் புதுமுக இயக்குநர்கள் என்பது இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. நல்ல கதைகளைகொண்டு சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் புதிய இயக்குநர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முன்னோட்டமாக இதை எடுத்துகொள்ள முடியும்.

கன்டென்டில் கவனம் ஈர்த்த படங்கள்: வெகுஜன சினிமா வசூல் ரீதியாக ஒருபுறம் முன்னேறிக்கொண்டிருக்கும் அதேவேளையில் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களும் கடந்த ஆறு மாதங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. அப்படி இயக்குநர் ஷானின் ‘பொம்மை நாயகி’ யோகிபாபுவுக்கு புது முகமூடி கொடுத்து அழகு பார்த்தது. உருவக்கேலி வழி பிரபலமான நடிகரிடமிருந்து அழுத்தமான நடிப்பை வெளிக்கொணர்ந்தது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை சாதியத்தின் வழியே பேசிய முக்கியமான படம்.

இந்த வரிசையில் ஆர்.கண்ணணின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தையும் குறிப்பிட முடியும். காரணம், படம் தாங்கிய கருத்து ஆழமானது. ஆனால், அதேசமயம் அதன் தமிழுக்கேற்ற திரைமொழியாக்கம் தடுமாறியிருந்தது. ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் ‘தலைக்கூத்தல்’ தேர்ந்த திரைமொழியுடன் கிராமத்து பின்னணியில் ஈர்த்தது. அதிகாரத்தை கேள்வி கேட்கும் வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ மலைவாழ் மக்களின் வலியை பேசியது.

வசூலில் ஹிட்டடித்தவை: இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ரூ.250 கோடியைத் தாண்டி வசூலித்தன. அடுத்தபடியாக வந்த மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ரூ.300 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. தனுஷின் ‘வாத்தி’ விமர்சன ரீதியாக பின்னடவை சந்தித்தாலும், வசூலில் ரூ.100 கோடியை எட்டியது. தவிர, ‘பத்து தல’, ‘விடுதலை பாகம் 1’, ‘போர் தொழில்’ படங்கள் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளன.

இயக்குநர்களின் கம்பேக்கில் சொதப்பியவை: இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களையே எதிர்கொண்டது. ‘மதயானைக் கூட்டம்’ என்ற காத்திரமான படைப்பை கொடுத்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியான ‘இராவணக் கோட்டம்’ ஏமாற்றம் அளித்தது. ‘இஸ்பெட் ராஜாவும், இதய ராணியும்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்டு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

பெண் மையக் கதாபாத்திர சினிமா: இந்த ஜானரை எடுத்துக்கொண்டால் அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயரை தவிர்த்துவிட முடியாது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘சொப்பன சுந்தரி’ என இரண்டு படங்களில் இறங்கி அடித்தார். கூடவே வரலட்சுமி சரத்குமாரின், ‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படங்கள் வெளியாகின. இவர்கள் ஒருபுறம் இருக்க காஜல் அகர்வாலும் களமிறங்கி, ‘கருங்காப்பியம்’, ‘கோஸ்டி’ என தன் பங்குக்கு இரண்டு படங்களை நடித்து கொடுத்தார். தவிர, சுனைனாவின் ‘ரெஜினா’, சோனியா அகர்வாலின் ‘உன்னால் என்னால்’ படங்களையும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக நீதிக் களம் கொண்ட படங்கள்: ‘இராவண கோட்டம்’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘மாமன்னன்’ படங்கள் வெளியாகின. இதில் வெகுஜன சினிமாவில் பெரிதும் பேசப்படாத அருந்ததியின மக்களை ‘கழுவேத்தி மூர்க்கன்’ தொட்டுச் சென்றது. ‘மாமன்னன்’ நாயக கதாபாத்திரத்திலிருந்தே அணுகியது பாராட்டப்பட வேண்டியவை.

புதிய முயற்சிகள்: இயக்குநர் ஜெகன் விஜயா தன்னுடைய ‘பிகினிங்’ படம் மூலம் ஒரே திரையில் இரண்டு படங்களை காட்சிப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டிருந்தார். தமிழ் சினிமாவின் அரிதாக களமான ‘சூப்பர் ஹீரோ’ களத்தை ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ நாட்டார் தெய்வ வழிபாட்டின் வழியே பேச முனைந்தது.

மொத்தமாக 2023-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் குறைந்த முதலீடு கொண்டு கன்டென்ட்டில் கவனம் செலுத்தி வசூலையும், பாசிட்டிவ் விமர்சனங்களையும் அறுவடை செய்துள்ளது. அடுத்த ஆறு மாதம் ரஜினியின் ‘ஜெயிலர்’, விஜய்யின் ‘லியோ’ என பெரும் வசூல் சாதனையை நோக்கி இருக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் அடுத்தடுத்து வர காத்திருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE