'எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்' - சிவகார்த்திகேயனின் மாவீரன் ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மாவீரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சுமார் 2.16 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லர் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? ட்ரெய்லரிண் முதல் ஃப்ரேமில் கையில் விலங்கு பூட்டப்பட்டு ஒருவர் அழைத்து செல்லப்படுகிறார். அது நடிகர் சிவகார்த்திகேயனாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஃப்ரேமில் அவரை அடிக்க சில பேர் வருகின்றனர். அவர் அப்படியே இரண்டு அடி பின்னோக்கி நகர்கிறார். படத்தில் மிஷ்கின் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவருக்கும், சாமானியனான சிவகார்த்திகேயனுக்கும் இடையே தான் கதை நகர்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவகார்த்திகேயன் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் கார்ட்டூன் வரையும் பணியை செய்கிறார். அதனால் எழும் சிக்கல்களை சார்ந்து அடுத்தடுத்து கதை நகர்கிறது. அதிதி, சிவகார்த்திகேயனுடன் பணிபுரிகிறார். சரிதா, சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்துள்ளார். யோகிபாபு, எப்போதும் போல சிவகார்த்திகேயனின் நண்பராக வருகிறார் என தெரிகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் கூவத்தின் ஓரமாக வசிக்கும் மக்களை இடம்பெயர செய்து அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்படுவார்கள். அதனை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முதல் சில ஷாட்களில் பயந்து பயந்து அடி வாங்கும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து வரும் ஷாட்களில் திருப்பி அடிக்கிறார். அவருக்கு அந்த தீரம் வந்தது எப்படி என்பது படம் வெளியான பிறகே தெரியும்.

மாவீரன் ட்ரெய்லர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE