“என்னை படிக்க வைத்ததே வெற்றிமாறன் தான்” - முனைவர் பட்டம் பெற்ற தாயார் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.

இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல், ‘கமலி அண்ணி’, ‘ரதிதேவி வந்தாள்’, ‘வசந்தமே வருக’, ’மழை மேக மயில்கள்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். எழுத்து மற்றும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட அவர், எம்ஜிஆர் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தனது தாய் மேகலா மத்திய நிதியமைச்சர் கைகளால் முனைவர் பட்டம் பெறுவதை முதல் வரிசையில் உட்கார்ந்து கைதட்டி உற்சாகப்படுத்தினார் வெற்றிமாறன்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மேகலா சித்ரவேல், “என்னைப் படிக்க வைத்ததே வெற்றிமாறன்தான். எனக்கு சிறுவயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். பெண்கள் நிறைய முன்னேற வேண்டும். வயதெல்லாம் ஒரு காரணமாக காட்ட வேண்டியதில்லை. வயதைக் காரணம் காட்டி அவர்களை அடக்கக் கூடாது.

எனது கைடு பேராசியர் பிரபாகர். அவர் ஒருமுறை என்னுடைய வீட்டுக்கு வந்தார். நாவல்களை பார்த்தார். “இவ்வளவு அழகாக எழுதுகிறீர்களே... இதனை ஆய்வுக் கட்டுரையாக எழுதிக் கொடுங்கள். முனைவர் பட்டம் கிடைக்கும்” என்றார். நான் எம்ஜிஆர் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ஆக, அவர் சொன்னதை என் பையனிடம் சொன்னேன். அவன் உடனே ‘கண்டிப்பாக நீங்க இத பண்ணுங்கம்மா’ என்றான். அவன்தான் 4 வருட கட்டணத்தை கட்டி என்னை படிக்க வைத்தான்.

இதனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், பெண்கள் எந்த வயதிலும் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். வயது ஒரு தடை கிடையாது. அடுத்த ஒரு பிஹெச்டி பண்ணலாம் என இருக்கிறேன். அதுக்கும் வெற்றிமாறன் ஓகே சொல்லிவிட்டான்.

நாங்கள் அதிகம் பேசமாட்டோம். எங்கள் வீட்டுக்குள் சினிமா வரவே வராது. அம்மா என்றால் சமைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும், பாத்திரம் கழுவ வேண்டும் இப்படி வைக்காதீர்கள். சுயம் தொலைக்காத அம்மாவாக வைத்திருங்கள். என் பையன் என்னை அப்படித்தான் வைத்திருக்கிறான். அவர்களுக்கான உரிமையை கொடுத்துவிடுங்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE