பாயும் ஒளி நீ எனக்கு Review: விக்ரம் பிரபு ‘சுமந்த’ திரைக்கதையில் பாய்ச்சல் நிகழ்ந்ததா?

By கலிலுல்லா

தனது நண்பருடன் இணைந்து ஸ்டார்அப் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் அரவிந்த் (விக்ரம் பிரபு). சிறு வயதில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக அவரால் குறைந்த ஒளியில் பார்க்க முடியாது. இப்படியான பிரச்சினையை எதிர்கொண்டு வரும் அவர், ஒருநாள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் ஒருவரை ரவுடிகளிடமிருந்து மீட்கிறார். அதன் எதிரொலியாக அவரை பழிவாங்க ஒரு கூட்டம் திட்டம் தீட்ட, மறுபுறம் அவரது சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னைச் சுற்றி நடப்பது புரியாமல் தவிக்கும் அரவிந்த் ஒரு கட்டத்துக்குப் பின் குற்றவாளிகளை நெருங்கி தனது இழப்புக்கு எப்படி பழிதீர்க்கிறார் என்பது திரைக்கதை.

குறைந்த ஒளியில் பார்க்க முடியாமல் தவிக்கும் நாயகனின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் எதிரிகள், அவர்களை பழிதீர்க்க போராடும் நாயகன் என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் அத்வைத். ஒன்லைனாக ஈர்க்கும் படம், திரைக்கதையில் தடம் மாறியிருக்கிறது.

படத்தின் ஆகப்பெரும் பிரச்சினை அதன் ‘கன்வீனியன்ட் ரைட்டிங்’. உதாரணமாக விரைவில் கொல்லப்படும் ஒரு கதாபாத்திரம் மற்றொரு முதன்மைக் கதாபாத்திரத்தின் மீது திடீரென அன்பை பொழிவது, பகலில் காட்டப்படும் ஒரு காட்சி நாயகனின் விழித்திறன் பிரச்சினையை பார்வையாளர்களுக்கு கடத்துவதற்காகவே உடனே அடுத்த ப்ரேமில் இரவுக் காட்சியாக மாற்றப்படுவது, வில்லன் டூ ஹீரோ மோதலைக் காட்ட குடும்பத்தை அலேக்காக பேக் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவது என படம் கதையின் போக்கில் நகராமல் காட்சிகளுக்கு தகுந்தவாறு வளைக்கப்பட்டிருப்பது ஒருவித செயற்கைத்தன்மையை கூட்டிவிடுகிறது. கதைக்கு எந்த வகையிலும் பயன்கொடுக்காத காதலும், அதற்கான பாடலும் அயற்சி.

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் இரண்டாம் பாதியின் விசாரணைக் காட்சிகள் கிஞ்சித்தும் சுவாரஸ்யம் கூட்டவில்லை. அதற்கு காரணம் பலவீனமான வில்லன் கதாபாத்திரம். வசனங்களால் மட்டுமே பில்டப் கொடுக்கப்படுகிறதே தவிர்த்து காட்சிகளால் அதற்கு நியாயம் சேர்க்கவில்லை. இதற்கு நடுவில் திடீரென மழைக்காளான் போல முளைக்கும் அழுத்தமில்லாத ஃப்ளாஷ்பேக் மற்றொரு புறம் இறுதிக் காட்சியில் வில்லனுக்கு பொறி வைப்பதெல்லாம் ஓலைச்சுவடி காலத்து ஐடியா.

தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மொத்தப் படத்தையும் ஒரே ஆளாக இழுத்து செல்கிறார் விக்ரம் பிரபு. ஒளி பிரச்சினையால் அவதிப்படும் அவர் ‘ஒலி’யால் எதிரிகளை கண்டுபிடித்து நெருங்குவது, ஆக்‌ஷன் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். காதலுக்காக வாணி போஜன் (நட்புக்காக என சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் நடிகர்களைபோல) திடீர் திடீரென தோன்றி மறைகிறார். வேல ராமமூர்த்தி இளமைத் தோற்றத்தில் கத்தியுடன் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் ‘எளந்தாரி பிள்ளை’யாக ஈர்க்கிறார். வில்லனாக தனஞ்சயா நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். விவேக் பிரசன்னா கதாபாத்திரத்தின் எல்லைக்குள் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகரின் பின்னணி இசை காட்சிகளில் கூட்டாத விறுவிறுப்பை இசையில் கூட்ட உதவியிருக்கிறது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் பிரித்து காட்டும் இடங்களில் கவனம் பெறுகிறது.

மொத்தமாக, சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதனை கதையின் போக்கில் கொண்டு செல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கு சாதகமாக வளைத்து நெளித்து எழுதியிருப்பது சுவாரஸ்யத்தை மட்டுபடுத்துவதுடன் செயற்கைத் தன்மையை கூட்டிவிடுவதால் ‘பாயும் ஒளி’ தேவையான பாய்ச்சலில்லாமல் பின்தங்கியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE