நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த பிரபல தயாரிப்பாளர்: ஹாலிவுட்டை உலுக்கும் சர்ச்சை

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான தி வைன்ஸ்டீன் கம்பெனியின் தலைவர் ஹார்வீ வைன்ஸ்டீன் பல நடிகைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

'தி ஆர்டிஸ்ட்', 'தி இமிடேஷன் கேம்', 'ஜாங்கோ அன்செயிண்ட்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் வைன்ஸ்டீன் கம்பெனி. இதன் துணை நிறுவனர் ஹார்வீ வைன்ஸ்டீன் தொடர்ந்து பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ உள்ளிட்ட நடிகைகள் ஹார்வீயால் பல வருடங்களுக்கு முன்பே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தற்போது வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பராக் ஒபாமா, மிஷெல் ஒபாமா, ஹிலாரி க்ளிண்டன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு வைன்ஸ்டீன் நிறுவனத்தில் படங்கள் நடித்தும், இயக்கியும் வரும் சில ஆண் நட்சத்திரங்களிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்க முற்பட்டபோது யாரும் பதில் சொல்லவில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்தது. தற்போது லியார்னடோ டிகாப்ரியோ, ஜார்ஜ் க்ளூனி, பென் ஆஃப்ளெக், ஜெனிபர் லாரன்ஸ், மெரில் ஸ்ட்ரீப்,  உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகைகள் வைன்ஸ்டீன் சர்ச்சை குறித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

டிகாப்ரியோ, "பாலியல் துன்புறுத்தலுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. நீங்கள் யார், எந்த வேலையில் இருக்கிறீர்கள் என்று எதையும் பார்க்க முடியாது. தைரியத்துடன் முன்வந்து குரல் எழுப்பிய பெண்களின் மன வலிமையை நான் பாராட்டுகிறேன்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் குற்றசாட்டுகளால் வைன்ஸ்டீனின் மனைவி ஜார்ஜினா சாப்மேன் தன் கணவரை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். தனது  கணவரின் மன்னிக்க முடியாத செயல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களை நினைத்தும் தான் மனமுடைந்துள்ளதாகவும், தனது குழந்தைகளின் நலன் காக்க இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல நடிகைகள் வைன்ஸ்டீனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சத்தின் காரணமாக அவர்கள் பொதுவில் பேச தயங்குவதாகவும் தெரிகிறது. வைன்ஸ்டீன் நிறுவனத்தில் பணியாற்றும் பலருக்கும் அவரது இந்த செயல்கள் குறித்து தெரிந்திருக்கிறது. தங்கள் வேலை போய்விடும் என்ற காரணத்தால் அவர்களால் எதையும் பேச முடியவில்லை என நிறுவனத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடவிரும்பாத சிலர் தெரிவித்துள்ளனர்.

வைன்ஸ்டீன் தற்போது நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE