“ஒரு காலத்தில் இதெல்லாம் கனவாக இருந்தது” - மேடையில் கலங்கிய நடிகை சுனைனா

By செய்திப்பிரிவு

கேரளா: “ஒரு காலத்தில் எனக்கு கனவு போல இருந்தது, இப்போது அது நிஜமாகி உள்ளது. அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என ‘ரெஜினா’ பட புரமோஷன் நிகழ்வில் நடிகை சுனைனா கண்கலங்கியபடி பேசினார்.

மலையாள இயக்குநர் டொமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா நடித்துள்ள ‘ரெஜினா’ திரைப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகை சுனைனா, “சில்லுக்கருப்பட்டி படத்தில் எனது நடிப்பை பார்த்து விட்டு தான் இந்த படத்தில் நடிக்க அழைத்ததாக இயக்குநர் கூறினார். இங்கே திரையிடப்பட்ட வீடியோக்களில் என்னை பார்க்கும்போது சினிமாவில் நான் நடிப்பதற்கு முன்பு இருந்த இளம் வயது சுனைனாவை பார்ப்பது போல் இருந்தது. இதெல்லாம் ஒரு காலத்தில் எனக்கு கனவு போல இருந்தது. இப்போது அது நிஜமாகி உள்ளது. அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று கூறி கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசுகையில், “எனது குடும்பத்தில் இருந்தும் தமிழ் ரசிகர்களிடமிருந்தும் எனக்கு அன்பும் ஆதரவும் நிறையவே கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு மிகவும் நன்றி உடையவளாக இருக்கிறேன். இந்த படம் எனது திரையுலக பயணத்திலேயே மிக முக்கியமாக படங்களில் ஒன்றாக இருக்கும்.

ஏனென்றால் 2018-ல் ஒரு கட்டத்தில் நான் என்ன பண்ண வேண்டும் என எல்லோரும் எனக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்ததால் ரொம்பவே களைப்படைந்து விட்டேன். ஆனால் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்வேன் என 2018-ல் முடிவு செய்தேன். அதைத்தொடர்ந்து ஒரு நடிகையாக, எனக்கு உண்மையாக இருப்பது போன்று உணரும் படங்களாக தேர்வு செய்ய ஆரம்பித்தேன்.

‘நிலா நிலா ஓடி வா’ என்கிற வெப்சீரிஸில் நடிக்க தொடங்கினேன். அந்த சமயத்தில் பல பேருக்கு வெப் சீரிஸ் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது.. இந்தியாவில் பெரும்பாலும் சீரியல்களிலும் தொடர்களிலும் நாம் பிரபலமாக இருந்தோம் என்பதால் பல பேர் அதில் ஆர்வம் காட்டாத சமயம் அது. ஆனால் எனக்கு வெப்சீரிஸ் கதை பிடித்திருந்தது. அதனால் தான், “எனக்குப் பிடித்ததை நான் பண்ணுவேன்” என முடிவெடுத்தேன்.

அதன் பிறகு தமிழில் ‘சில்லுக்கருப்பட்டி’ போன்ற எனக்கு மகிழ்ச்சி தரும் வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தேன். ரெஜினாவும் அந்த பட்டியலில் ஒன்றாக இடம்பிடிக்க போகிறது. இதுபோன்ற படங்களில் தான் நான் நடிக்க விரும்புகிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு விதவிதமான கதாபாத்திரங்களை கொடுப்பதற்கு விரும்புகிறேன். ரெஜினா என்கிற சாதாரண ஒரு குடும்பப்பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஏற்ற இறக்கங்கள் தான் இந்த படத்தின் கதை. படம் பார்த்தபோது ரெஜினாவின் உலகத்திற்குள் நான் நுழைந்தது போன்று உணர்ந்தேன்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE