மர்ம நபர்களிடமிருந்து கொலை மிரட்டல்: ‘ஆதிபுருஷ்’ வசனகர்த்தா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: ‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது.

எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் ராமாயணத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சர்ச்சைக்குரிய வசனங்களை திருத்த இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து ‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவரும் நிலையில், அப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு மர்ம நபர்களிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மனோஜ் முன்டாஷிர் அளித்த புகாரின் பேரில் மும்பை காவல்துறை அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE