அம்மாக்கள் பற்றிய பாடல்கள், அம்மாக்களை மையப்படுத்திய திரைப்படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், அப்பாக்கள் பற்றிய பாடல்களும், திரைப்படங்களும் மிகவும் குறைவுதான். காரணம், அம்மாக்களின் ஆசை, கனவு, விருப்பம், லட்சியங்களைவிட அப்பாக்களின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும் எப்போதுமே பெரிதானவை என்பதால்தான். தான் எட்ட முடியாத உயரங்களை, தன் மகன் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களை தோளில் தூக்கி வானம் முட்டச் செய்வதில் அப்பாக்களுக்கு நிகர் வேறில்லை. இந்த லட்சிய அப்பாக்களின் சபத க்யூவில், நின்று தோற்க விரும்பாத பலர் அம்மா சென்டிமென்டை கையில் எடுத்து வெற்றி பெற்றபோது, அப்பாவின் சபத க்யூவில் நின்று அதிகமான வெற்றிகளை ஈட்டியவர் நடிகர் ரஜினிகாந்த்.
தம்பிக்கு எந்த ஊரு: வில்லன், குணசித்திரப் பாத்திரங்கள், கதாநாயகன் என்று படிப்படியாக முன்னேறிய ரஜினிகாந்தை, முழுநீள நகைச்சுவை நாயகனாக்கி, இயக்குநர் ராஜசேகர் இயக்கிய திரைப்படம் "தம்பிக்கு எந்த ஊரு". இந்தப் படத்தில் பாலுவாக வரும் ரஜினி, பெரும் பணக்காரரான சந்திரசேகரின் ஒரு மகன். முன்கோபம், முரட்டுத்தனத்தால், ஊதாரித்தனமாக பணத்தை செலவழிப்பதோடு, ஊர் வம்பையும் விலைக்கு வாங்கி வரும் ரஜினியின் நடத்தையால் மனம் நொந்துப் போகும் அவரது தந்தை, ரஜினிக்கு வித்தியாசமான சவால் ஒன்றை முன்வைப்பார். அந்த சவாலில் ரஜினி வெற்றி பெற்றதோடு, பணத்தின் அருமையையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொள்வார்.
"தம்பிக்கு எந்த ஊரு" திரைப்படத்தில் அதுபோலத்தான். தனது அப்பாவின் சொத்துகளை ஊதாரித்தனமாக செலவு செய்யும் ரஜினியிடம், அவரது தந்தை கதாப்பாத்திரத்தில் சந்திரசேகராக வரும் வி.எஸ்.ராகவன், உத்தமபாளையத்தில் இருக்கும் தனது நண்பனும், முன்னாள் ராணுவ வீரருமான கங்காதரனிடம் சென்று ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும். இந்த ஒரு வருட காலத்தில், எந்தவொரு சூழ்நிலையிலும் சந்திரசேகர்தான் தன்னுடைய தந்தை என்ற உண்மையை சொல்லக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ரஜினி எப்படி நிறைவேற்றினார். தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற வந்த இடையூறுகள் என்ன என்பதுதான் அந்த திரைப்படம்.
அப்பாவின் ஆசைக்காக நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து ரஜினி, ஓர் ஆண்டு தனது தந்தையின் பெயரைச் சொல்லாமல் என்ன செய்தார் என்று பார்த்தால், அவர் செல்லும் ஊரில் திமிராக நடந்துகொள்ளும் பணக்காரப் பெண்ணான சுமதியின் திமிரை அடக்கி, அவரையே காதலித்து திருமணம் செய்துகொள்வார். இதுபோன்றதொரு அதிர்ஷ்டம் நிறைந்த சவாலை எதிர்கொள்ள எந்த மகனுக்குத்தான் பிடிக்காது.
» ''ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம்'' - 12 மணி நேரத்துக்கு மேலாக நடந்த நடிகர் விஜய் நிகழ்வு நிறைவு
பாட்ஷா: இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த திரைப்படம் பாட்ஷா. இந்த திரைப்படத்தில் வில்லன் மார்க் ஆன்டனியிடம் வேலை செய்யும் ரஜினியின் தந்தையான விஜயகுமார் இறக்கும் தருவாயில், "நீ இங்கிருந்து மெட்ராஸ் போய் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும். உன்னோட தம்பி, தங்கைகளை நன்றாக படிக்க வைத்து, நல்ல வேலை, நல்லபடியா அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்" என்ற கடைசி ஆசையை சொல்லிவிட்டு இறந்துபோவார்.
ஒரு மகனாக மெட்ராஸ் வந்த பாட்ஷா, டான் வாழ்க்கையில் இருந்து திருந்தி அமைதியாக வாழ்ந்து ஒரு தங்கைக்கு பெரிய இடத்தில் திருமணத்தையும், தம்பியை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், மற்றொரு தங்கைக்கு மெடிக்கல் காலேஜில் இடமும் வாங்கித் தருவார். நல்லவேளை படம் வந்த 95-ம் ஆண்டில் நீட் தேர்வு இல்லாததால், ரஜினி தனது தங்கைக்கு உண்மையை சொல்லி மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்தை வாங்கித் தரும் அந்தக் காட்சியைப் பார்த்த பலருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது எத்தனை சுலபமானது என்ற எண்ணத்தோன்றும்.
முத்து: ‘முத்து’ படத்தில் ரஜினிக்கு அப்பாவாக ரஜினியே நடித்திருப்பார். பல கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ஜமீன்தார் ராஜா, உறவினரான ரகுவரனின் குழந்தையை ஜமீனின் வாரிசாக தத்தெடுத்துக் கொள்வார். இந்நிலையில், இறப்பதற்கு முன், ஜமீன்தார் ராஜா ரஜினியின் மனைவி ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்துபோய்விடுவார். எங்கே இதனால், தங்களுக்கு சொத்துகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில், ஏழை மக்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலங்களை தனது பெயரில் மாற்றி, ரஜினியை ஏமாற்றி சொத்துகளை அபகரித்துக்கொள்வார்.
இந்த உண்மையை அறிந்த ரஜினி, ரகுவரனிடம் அவரது குழந்தையின் பெயரில் ஜமீனுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் எழுதி வைத்ததற்கான பத்திரங்களையும், உயில்களையும் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவார். கொடுத்த வாக்கையும், கொடுத்த பொருளையும் திருப்பிக் கேட்கும் பழக்கமில்லாத ரஜினியிடம், கடைசியாக அவருடைய குழந்தையையும் ரகுவரனின் மனைவி வாங்கிக்கொள்வார். அப்போது, ஜமீன்தார் ரஜினி, அந்த குழந்தையை அதாவது அவருடைய மகனை, அன்புடனும், பாசத்துடன் வளர்க்க வேண்டும் என்றும், பணத்தின் நிழலே அவர் மீது படக் கூடாது. என்றாவது ஒருநாள் நான் திரும்பி வருவேன், அதுவரை இவன் யார் என்ற உண்மை யாருக்குமே தெரியக்கூடாது என தன்மீது சத்யம் செய்துவிட்டு சென்றுவிடுவார்.
இதையடுத்து, உண்மையை தெரிந்துகொள்ளும் ரஜினி, கடைசி காட்சியில், "இந்த முத்து எப்போவுமே என்னைக்குமே எல்லாருக்கும் ஒரு சேவகன்தான்" என்று கூறிவிட்டு மீண்டும் குதிரைவண்டி ஓட்ட ஆரம்பித்துவிடுவார். சொத்துக்காக கூடப் பிறந்த அண்ணன் தம்பியை வெட்டுக்குத்து, போலீஸ், கோர்ட்னு அலைந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில், சித்தப்பா பிள்ளைகளுக்கு சொத்துகளை எல்லாம் எழுதிவைப்பது ரஜினி படத்தில் மட்டும் நிகழும் அசாத்திய சாதனை என்பது ரசிகர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அருணாச்சலம்: அப்பாவின் சபத க்யூவில், ரஜினிக்கு வந்த மிகவும் கடினமான சவாலே, அருணாச்சலம் திரைப்படம்தான். இந்தப் படத்தில் வேதாச்சலம் வேடத்தில் வரும் தந்தை ரஜினி, மகன் ரஜினிக்கு வைக்கும் சவால் ரொம்ப சுவாரஸ்யமானது. கோடீஸ்வரரான வேதாச்சலம், தனது மகன் என்றைக்காவது திரும்பிவந்தால், அவரிடம் மறக்காமல், கொடுத்திட வேண்டும் என ஒரு விஎச்எஸ் கேசட்டை கொடுத்துவிட்டு இறந்து போயிருப்பார். அந்த கேசட் வழி தோன்று, வேதாச்சலம், "வா அருணாச்சலம் நீ வருவேனு எனக்குத் தெரியும்" என்று கூறும்போது, படத்தில் மகனாக நடிக்கும் ரஜினிக்கும், படம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் தூக்கி வாரிப்போட்டுவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, அந்த கேசட்டில், ரஜினி பேசும் எல்லா வசனங்களும், அந்த காட்சியையும் சிரிக்காமல் பார்க்காத மகன்களே இருக்கமுடியாது. ஆனால், அது ஒரு சீரியஸான காட்சி. அதுதான் பார்வையாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே.
அதில், தந்தை ரஜினி மகன் ரஜினியிடம் தனது கடைசி ஆசையாக, "நான் பொறந்து வளர்ந்த என் நாட்டு மக்களுக்கு, ஏழை மக்களுக்கு ஒண்ணுமே செய்யல. அவுங்களுக்காக என் சொத்தில் இருந்து 3 ஆயிரம் கோடியை ஒதுக்கி வச்சிருக்கேன். அதுபத்தி, ரங்காச்சாரி உனக்கு சொல்லியிருப்பார். அப்பாங்கற ஸ்தானத்தில் இருந்து, நான் உனக்கு 30 கோடி ரூபாய் கொடுக்கிறேன். அந்த 3 ஆயிரம் கோடி ரூபாய் உனக்கு வேணும்னு சொன்னால், 30 நாளில் 30 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதுக்கு 3 நிபந்தனை. இந்த ரூபாய்ல ஒரு ரூபாய்கூட யாருக்கும் தானமாகவோ, தர்மமாகவோ, பரிசாகவோ கொடுக்கக்கூடாது. 30 நாள் முடியும்போது, உன்னோட பெயரிலோ, மற்றவர்கள் பெயரிலோ எந்த சொத்தும் இருக்கக்கூடாது. ஒரு குண்டூசி கூட இருக்கக்கூடாது. 30 நாளில் 30 கோடி செலவு செய்தால், 3 ஆயிரம் கோடி கிடைக்கும்போகும் தகவலை யாருக்குமே சொல்லக்கூடாது. இந்த நிபந்தனைகளில் ஜெயித்தால், அந்த 3 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உனக்கு" என்று சொல்லிவிடுவார்.
ஒரு வழியாக தந்தையின் நிபந்தனைகளை நிறைவேற்றி 3 ஆயிரம் கோடி ரூபாயை பெற வேண்டிய நேரத்தில், தேர்தல் நேரத்தில் போஸ்டர் பிரிண்ட் செய்த வகையில் மிச்சமான ரூபாய் என்று ரஜினியின் நண்பர் கொண்டுவர, அதை அப்படியே தனது செகரெட்டிரியாக வேலை பார்த்த ரம்பாவுக்கான சம்பளத் தொகையென கூறி கொடுத்து அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றி முடிக்கும் ரஜினியுடன் சேர்ந்து படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பெருமூச்சிரைத்துப் போகும். ரஜினி 30 நாளில் 30 கோடி செலவழிப்பதை, ரூ.30 முதல் ரூ.300 வரை டிக்கெட்டுக்கு செலழித்து பார்த்து ரசிகர்களும் தங்களது சபதத்தில் வென்றதெல்லாம் வேறு கதை.
இப்படியான படங்கள்தான், அப்பாக்கள் சென்டிமென்டை முன்வைத்து நடிகர் ரஜினிகாந்துக்கு பல வெற்றித் திரைப்படங்களுக்கான கதைகளை உருவாக்க காரணமாக அமைந்தது. பல கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அவர்தான் உருத்தான வாரிசு என்பது தெரியாமல், அங்கு வேலைக்காரராக, வண்டிக்காரராக, தொழிலாளியாக வேலை செய்து வருவார். பிறகு ஒருவழியாக உண்மைத் தெரியவரும். அதன்பின் அந்த சொத்துகளை இல்லாதவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, பழையபடி வேலைக்காரராக, வண்டிக்காரராக, தொழிலாளியாக படத்தின் ஓப்பனிங் சாங்கை பாடிக்கொண்டு நன்றி கூறி படம் பார்க்கச் சென்றவர்களை முழு திருப்தியுடன் அனுப்பிவைப்பார்.
இன்று - ஜூன் 18, 2023 - தந்தையர் தினம்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago