டக்கர்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

குடும்பத்தின் வறிய நிலையைப் போக்க, சென்னைக்கு வந்து கால் டாக்ஸி ஓட்டுகிறார் கிராமத்து இளைஞர் குணா (சித்தார்த்). ஆள் கடத்தல் தலைவன் ராஸின் (அபிமன்யு சிங்) ஆட்கள், தொழிலதிபர் அருண் வைத்தியநாதனின் மகள் லக்கியைக் (திவ்யான்ஷா) கடத்தும்போது காப்பாற்றுகிறார் குணா.

ஆனால், வீட்டுக்குச் செல்ல மறுக்கும் லக்கி, குணாவை ‘திக்குத் தெரியாமல் ஒரு பயணம் போகலாம்’ என்று அழைக்கிறாள். உடன்படும் குணாவும், லக்கியும் அந்தப் பயணத்தில் காதலையும் காமத்தையும் வைத்து ஆடும் ஈகோ ஆட்டமே கதை.

பணம் தான் வாழ்க்கை என நினைக்கும் நாயகனுக்கும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என உணர்ந்த நாயகிக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கும் படத்தில், நகைச்சுவை, ஆக்‌ஷன் அம்சங்களைத் தூக்கலாக வைத்து விறுவிறுப்பாகக் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.கிருஷ்.

ஏழைக் குடும்பத்து இளைஞனாக வரும் சித்தார்த், வறுமையின் சிறு சுவடும் தெரியாத தோற்றத்துடன் இருப்பது கூடுதல் நகைச்சுவை. சொகுசு கார்களை வாடகைக்கு விடும் கால் டாக்ஸி நிறுவனத்தை ஒரு சீனர், சென்னையில் நடத்துகிறார் என்பதை நம்ப முடியவில்லை. அவரையும் அவர் ஆட்களையும் வைத்து ஓர் அதிரடியான ‘குங்ஃபூ’ சண்டைக் காட்சிக்குத் திட்டமிடவே அப்படியொரு ஏற்பாடு என்று இயக்குநர் சொல்வாரானால், அந்தச் சண்டையில் புதுமை இல்லை.

மாறாக, வில்லன் ராஸின் சதுர வடிவ மேன்சனுக்குள் புகுந்து அவனது ஆட்களை நாயகன் பந்தாடும் மாடிப்படி சண்டைக் காட்சியை சுவாரஸ்யமாக வடிவமைத்துப் படமாக்கியிருக்கிறார் ‘ஸ்டன்ட்’ இயக்குநர் தினேஷ் காசி. ஆக்‌ஷன் காட்சியில் அக்கறை செலுத்தத் தவறிய இயக்குநரின் அலட்சியத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு: நாயகியை வில்லனிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும் நாயகன் திரும்ப வரும் காட்சி. அப்போது அணிவகுத்து நின்று சுடும் கூலிப்படையினரின் கைத்துப்பாக்கிகளில் இருந்து சிதறும் தோட்டாக்கள் ‘ரப்பர்’ குண்டுகளா என்பதை இயக்குநர் தெளிவுபடுத்தினால் நலம்.

சித்தார்த் கிராமப்புற வறிய குடும்பத்தின் இளைஞனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நடிப்பிலும் படம் முழுவதும் விரைப்பும் முறைப்புமே அதிகமாக இருக்கிறது. ‘காதல் தொடக்கப் புள்ளி, காமம் முற்றுப் புள்ளி’ என்று தத்துவம் பேசும் நவீனப் பெண்ணாக நடித்துள்ள திவ்யான்ஷாவின் நடிப்பும் உடல்மொழியும் சிறப்பு. அவர் அப்பாவாக நடித்துள்ள அருண் வைத்தியநாதன், ஆள் கடத்தல் மாபியா தலைவன் ராஸிடம் பயிற்சி எடுக்க மும்பையிலிருந்து வரும் ‘டான் மேக்ஸ்’ ஆக நடித்துள்ள யோகி பாபு, சில காட்சிகளே வந்தாலும் ஒரகடம் மாதவனாக சிரிக்க வைத்துச் செல்லும் முனீஸ்காந்த், சித்தார்த்தின் உயிர் நண்பன், பண்பலை அறிவிப்பாளர் லாடுவாக வரும் விக்னேஷ் ஆகியோர் கலகலப்புக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்.

கிராமத்திலும் மாநகரத்திலும் நாயகன் படும் பாடுகள் 20 நிமிடம், வில்லனின் கடத்தல் லீலையை நிறுவ 10 நிமிடம், யோகிபாபுவுக்கு 10 நிமிடம் என 40 நிமிடங்களை முதன்மையான ஒருவரிக் கதைக்கே செலவிட்டிருந்தால் உண்மையாகவே ‘டக்க’ரான காதல், ஆக்‌ஷன் படமாகியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE