“என் அடுத்தப் படம் மாவோயிஸ்ட் இயக்கம் பற்றியது” - ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

மும்பை: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென் தனது அடுத்த படம் இந்தியாவில் செயல்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தை பற்றியது என்று தெரிவித்துள்ளார்.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனது அடுத்த படம் இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தை பற்றியது. இந்தப் படத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் விபுல் ஷாவுக்காக இயக்கவுள்ளேன். அவருடன் பணிபுரிந்தது மிகவும் திருப்திகரமான அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE