திருமணம் குறித்து சர்ச்சைக் கருத்து - ஷாஹித் கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

மும்பை: திருமண வாழ்க்கை குறித்து ஷாஹித் கபூர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘தூங்காவனம்’. கமல்ஹாசன் நடித்த இப்படம் 2011ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சு மொழியில் வெளியான ‘ஸ்லீப்லெஸ் நைட்ஸ்’ படத்தில் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

தற்போது இந்தப் படத்தை தழுவி இந்தியில் ‘ப்ளடி டாடி’ என்ற படம் உருவாகியுள்ளது. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இப்படத்தில் ஷாஹித் கபூர் நாயகனாக நடிக்கிறார். இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷனுக்கான பேட்டி ஒன்றில் பேசிய ஷாஹித் கபூர், ‘திருமணம் என்ற ஒட்டுமொத்த விஷயமும் ஒன்றே ஒன்றுக்காகத்தான். ஆண் தவறானவனாக இருந்தால், பெண் அவனை சரிசெய்ய வேண்டும். எனவே அவனின் எஞ்சியுள்ள வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவன் சரியானவனாக, ஒரு நல்ல மனிதனாக மாறுவான். வாழ்க்கை என்பது அதுதான்” என்று கூறியிருந்தார்.

ஷாஹித் கபூரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தவறான ஆணை திருத்துவது தான் பெண்ணின் வேலையா?’ என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஷாஹித் கபூர் தான் நடித்த ‘கபீர் சிங்’ (அர்ஜுன் ரெட்டி ரீமேக்) கதாபாத்திரத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்று சிலர் விமர்சித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE