விவசாயத்தைக் கவனித்துக்கொண்டே அண்ணன் மகள்களை வளர்த்துவருகிறார், பெற்றோரை இழந்த தமிழ்ச்செல்வி (சித்தி இட்னானி). அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவரின் மாமன்கள் தங்கள் மகன்களில் ஒருவருக்கு அவரைத் திருமணம் செய்துவைக்க முயல்கின்றனர். இச்சூழலில் சிறையில் இருக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கத்தைத் தேடிச்செல்கிறார் தமிழ்ச்செல்வி. அவர் தனது அத்தை மகள் என்பதைத் தெரிந்து கொள்கிறார் காதர் பாட்ஷா. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது, மாமன்கள் மோதுகின்றனர். அதே நேரம் பதவிவெறி பிடித்த அரசியல்வாதியை (ஆடுகளம் நரேன்), பகைத்துக் கொண்டதால் அவர் மகனும் காதரை பழிவாங்கக் காத்திருக்கிறார். இவர்களிடம் இருந்து காதர் பாட்ஷாவும் தமிழ்ச்செல்வியும் எப்படி மீள்கிறார்கள் என்பது மீதிக் கதை.
தென் தமிழகப் பின்னணியில் மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் நடக்கும் கொலைவெறி மோதல்களை மையமாகக் கொண்ட கதையை, மீண்டுமொருமுறை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஆதிகாலத்தில் ஒன்றாக வாழ்ந்த மனிதர்களுக்குள் பகை மூளக் காரணமே மண்ணும் பெண்ணும்தான் என்கிற வரலாற்று அறிமுகத்துடன் படம் தொடங்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அதற்கடுத்து நிகழ்பவை அனைத்தும் பார்த்துச் சலித்த காட்சிகளாக அலுப்பூட்டுகின்றன.
சிறையில் இருந்தாலும், பெரிய பில்டப் காட்சிகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறார் நாயகன். ஆனால் தொடர்ந்து சண்டைக் காட்சிகளாக மட்டுமே அவர் வீரம் காண்பிக்கப்படுவது அயற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் முதல் பாதியில் எந்த சுவாரசியமும் இல்லை. தமிழ்ச்செல்விக்கும் காதர் பாட்சாவுக்கும் என்ன உறவு என்பதைச் சொல்லும் இடைவேளைக்கு முந்தைய ஃப்ளாஷ்பேக்கில் சற்று ஆசுவாசம்.
இரண்டாம் பாதியில் காதர் பாட்சாவின் முன்கதையைச் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கில் இஸ்லாமியப் பெரியவர் கதாபாத்திரம் (பிரபு) சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அதன் வழியே தென்தமிழகப் பகுதிகளில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்வதைச் சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது. மதங்கள் வேறு என்றாலும் இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் அந்த மதநல்லிணக்கம் சாத்தியமானது என்று, போகிற போக்கில் உதிர்க்கப்படும் வசனம் தேவையற்றத் திணிப்பு.
இதுபோன்ற சின்னச் சின்ன புதுமைகளைத் தாண்டி, ஓவர் வன்முறையும் தாக்கத்தை ஏற்படுத்தாத சென்டிமென்ட்டுமாக நகர்கிறது பின்பாதி. சொத்துத் தகராறு, சாதி கவுரவம் ஆகியவற்றில் ஆண்களைக் கொம்புசீவி விடுபவர்களாக சில பெண்கள் இருப்பதையும் இதனால் அப்பாவிப் பெண்கள் பாதிக்கப்படுவதையும் காண்பித்திருப்பதில் சிறப்பு.
முரட்டுவீரனாக ஆர்யா தோற்றத்திலும் ஆக்ஷன் காட்சிகளிலும் பாஸ்மார்க் வாங்கினாலும் எமோஷனல் காட்சிகளிலும் வசன உச்சரிப்பிலும் தடுமாறியிருக்கிறார். சித்தி இட்னானி தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். முத்தையா படங்களின் நாயகிகள் வழக்கமாக ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் பாத்திரம் ஏற்படுத்தவில்லை. இஸ்லாமியப் பெரியவராக பிரபு, முத்திரைப் பதிக்கிறார். வில்லன்களில் ஆடுகளம் நரேனும் அவர் மகனாக தமிழும் மிரட்டியிருக்கிறார்கள். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை ஆக்ஷன் படத்துக்குத் தேவையானதை வழங்கி இருக்கிறது.
ஆங்காங்கே சில புதுமைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பழகிய கதை, அலுப்பூட்டும் திரைக்கதை ஆகியவற்றால் ஏமாற்றுகிறார் இந்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago