மனத்திரையில் மட்டும் காட்சிப் படிமங்களாக நீந்தும் இளையராஜாவின் 10 பாடல்கள் | Ilayaraja Birthday Special

By குமார் துரைக்கண்ணு

அந்தப் பாடல் எப்படி உருவானது? - இளையராஜாவின் பாடல்களைக் கொண்டாடித் தீர்க்கும் பலருக்கு அவரிடம் கேடகத் தோன்றும் கேள்வி இதுவாத்தான் இருக்கும். "அந்த நேரத்தில் எனக்கு எனக்கு வந்ததோ, அதைத்தான் செய்தேன்" என்று அந்தக் கேள்விக்கு அவரும் பலமுறை பதிலும் சொல்லிவிட்டார். இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவரது இசையில் வெளிவந்த பாடல்களைக் கேட்கும்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோணும் கேள்வி தொடரவேச் செய்கிறது.

அறிவியலுக்கு அப்பாற்பட்ட மனதின் வலிகளை ராஜாவின் வயிலின் இசைபோல் தேற்றும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆழ்மனதில் அழுந்திக் கொண்டிருக்கும் கனத்தை அவரது மென்மையைவிட மிருதுவான புல்லாங்குழல் இசை இலகுவாக்கிவிடும். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இளையராஜா, ஒரு பாடலுக்கு மாற்றாக 6 ட்யூன்களைக் கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.

நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யம் அளிக்கும் அந்த உண்மைக்கு சான்று பகிர்பவை, இன்றளவும் நிலைத்து நிற்கும் அவரது பாடல்கள்தான். உதாரணத்துக்கு அந்த வருடத்தில் ஒரு 10 படத்துக்கு இசையமைத்திருந்தால், படத்துக்கு 5 பாடல்கள் என்றாலும் கிட்டத்தட்ட 300 பாடல்கள் வருகின்றன. கம்போஸிங்கில் ஓகேவாகி வெளிவந்த பாடல்களைக் கேட்டே சிலாகித்துப் போகும் பலருக்கு, ஒவ்வொரு படத்துக்காகவும் அவர் மெட்டமைத்த மொத்தப் பாடல்களையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படி, இளையராஜா இசையமைத்து வெளியான திரைப்படங்களின் கேசட்டுகளில் இடம்பெற்றும், ரசிகர்கள் மெச்சிப் புகழ்ந்தும், படத்தில் காட்சிப்படுத்தப்படாத சில பாடல்களை பற்றி பார்ப்போம்.

மலர்களே நாதஸ்வரங்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1978-ல் வெளிவந்த திரைப்படம் கிழக்கே போகும் ரயில். கோவில் மணியோசை தன்னை, பூவரசம் பூ பூத்தாச்சு, மாஞ்சோலை கிளிதானோ உள்ளிட்ட எவர்கிரீன் ஹிட்ஸ்களைக் கொண்ட இந்தப் படத்துக்காக மெட்டமைக்கப்பட்டதுதான் "மலர்களே நாதஸ்வரங்கள்" பாடலும். ஆனால், ஏனோ தெரியவில்லை பல்லாயிரக்கணக்கான ரசிக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவில்லை. மலேசியா வாசுதேவனும் ஜானகியும் பாடியிருக்கும் அந்தப் பாடல் படத்தில் வராமல் போனது ஏமாற்றம்தான்.

ஆனந்த பூங்காற்று தாலாட்டுதே: 1979-ல் வெளிவந்த மணிப்பூர் மாமியார் படத்தில் வந்தது "ஆனந்த பூங்காற்று தாலாட்டுதே" பாடல். மலேசியா வாசுதேவன் தனது குரலை மாற்றி சி.எஸ்.ஜெயராமன் குரலில் பாடலை பாடியிருப்பார். ராஜாவின் இசையில் சி.எஸ்.ஜெயராமன் பாடியிருந்தால் எப்படியிருக்கும் என்ற சாத்தியமற்ற கற்பனையை நிகழ்த்திக் காட்டியிருக்கும் இந்தப் பாடலும் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால், அப்போது ரெக்கார்டாக வந்த இசைத்தட்டுகளில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருந்தது.

தூரத்தில் நான் கண்ட உன்முகம்: பாரதிராஜா இயக்கத்தில் 1980-ல் வெளிவந்த திரைப்படம் நிழல்கள். இளையராஜாவுடன் வைரமுத்து இணைந்த முதல் திரைப்படம் இது. ஆனால் இந்தப் பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருப்பார். எஸ்.ஜானகியின் குரலில் வரும் "தூரத்தில் நான் கண்ட உன்முகம்" பாடலும் படத்தில் இடம்பெறவில்லை. ஆனால், பெண்கள் பலரும் விரும்பிக் கேட்கும் பாடல்களின் பட்டியலில் இந்தப் பாடலுக்கு எப்போதும் ஒரு தனியிடம் இருந்து வருகிறது.

புத்தம் புது காலை: இயக்குநர் மகேந்திரனின் மருதாணி திரைப்படத்துக்காகத்தான் இந்தப் பாடல் அமைக்கப்பட்டதாம். ஆனால், பாரதிராஜா இயக்கத்தில் 1981ல் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்துக்காக மாற்றப்பட்டது. இந்தப் பாடலுக்கு ஹாலந்தில் இருந்த வந்திருந்த பெண் இசைக் கலைஞர்தான் புல்லாங்குழல் வாசித்துள்ளார். அவருடன் சேர்ந்து ராஜாவின் இசைக்குழுவில் இருந்த மறைந்த குழல் இசைக் கலைஞர் சுதாகரும் வாசித்திருக்கிறார். கீழ்வானம் சிவக்கப் பிறக்கும் விடிகாலை நேரத்தில் பயணங்களின்போது கேட்கக்கேட்க தெவிட்டாத இந்தப்பாடலும் பல ஆண்டுகளாக காட்சிப்படுத்தவில்லை. 2014ல் வெளிவந்த மேகா திரைப்படத்தில் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் வெறுமனே பாடலாக மட்டும் இருந்தபோது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல் ஏற்படுத்தவில்லை.

சிப்பிக்குள் ஒரு முத்து: 1986-ல் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தின் பாடல்களுக்கு என்று பிரத்யேக ரசிகப்பட்டாளமே இன்றுவரை உண்டு. கம்ப்யூட்டர், ஏவுகணை என வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு இளையராஜாவின் இசை ஆகபெரும் பலம் சேர்த்திருக்கும். வனிதாமணி, மீண்டும் மீண்டும் வா, எஞ்சோடி மஞ்சக்குருவி, விக்ரம் உள்ளிட்ட பாடல்கள் படத்தில் வந்திருந்தாலும், "சிப்பிக்குள் ஒரு முத்து மலர்ந்தது" பாடல் மட்டும் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால், கேசட்டில் அந்தப் பாடல் இருக்கும். யேசுதாஸுடன் ஜானகி சேர்ந்து பாடியிருக்கும் இந்தப்பாடலின் சரணங்கள் எப்போதும் கேட்டாலும் உற்சாகம் தருபவை.

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு: ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1989ல் வெளிவந்த திரைப்படம் ராஜாதி ராஜா. பாடல்களுக்காக ஒரு கதையை எழுதி அதில் வெற்றியைப் பதிவு செய்தவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். அவருமே இப்படி ஒரு பாடலை பயன்படுத்தாமல் போனது வியப்பான செய்திதான். இந்தப் படத்துக்காக இசையமைக்கப்பட்டதுதான் "உன் நெஞ்சத் தொட்டு சொல்லு" பாடல். சுசிலாவும், சித்ராவும் இணைந்து பாடிய இந்தப் பாடல் கேட்பதற்கு அத்தனை இனிமையானதாக இருக்கும். சிறையில் இடம் மாறியிருக்கும் ரஜினிக்காக ராதாவும், நதியாவு சண்டைப் போட்டுக்கொள்ளும் காட்சிக்குப் பிறகு இந்தப் பாடல் வந்திருக்க வாய்ப்பு அதிகம், என்றாலும் படத்தில் இந்தப் பாடல் பயன்படுத்தப்படவில்லை என்பது சோகமான செய்தி.

ஆடிப்பட்டம் தேடி செந்நெல்: கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இந்தப்படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்த பலருக்கும் இப்படி ஒரு பாடல் இருப்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், ஒரு கிராமத்துப் பின்னணியில் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு வயல்வெளி நிறைந்த பகுதியில் பாடுவது போலத்தான் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைக்கத் தோன்றும். மனோவின் குரலில் வரும் "ஆடிப்பட்டம் தேடி செந்நெல்" பாடல்தான் அது. பாடலைக் கேட்கும்போது நம் நினைவுகள் பசுமை நிறைந்த வயல்வெளிக்குள் பயணிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவில்லை ஆடியோ கேசட்டில் இருந்தது.

மத்தாப்பூவு ஒரு பெண்ணா: அதே படத்துக்காக இசையமைக்கப்பட்ட மற்றொரு பாடல்தான் "இந்த மத்தப்பூவு ஒரு பெண்ணா மாறாதா" பாடல். சித்ரா குரலில், சாக்ஸபோன், ஆர்மோனியம், தபேலாவுடன் வரும் தொடக்க இசையே ஆளை மயக்கும் அற்புத வினையூக்கிகளாக பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. ரசித்துக் கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப்பாடலும் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கும்.

புத்தம் புது பூ பூத்ததோ: இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் 1991ல் வெளிவந்த திரைப்படம் தளபதி. படத்தின் பாடல்கள் ஏற்படுத்தியிருந்த தாக்கம் பிபிசியின் சிறந்த பாடல்களின் பட்டியல் வரை எதிரொலித்திருந்தது. இந்தப்படத்தில் யேசுதாஸ் ஜானகி குரலில் இசையமைக்கப்பட்ட அதிஅற்புதமான பாடல் "புத்தம் புது பூ பூத்ததோ" பாடல். ஆனால் பாடல் திரைப்படத்தில் வரவில்லை. பானுப்ரியாவை மணமுடித்த பின்னர், தனது வீட்டிற்கு ரஜினி அழைத்துவரும் காட்சியின் பின்னணியில், இப்பாடலின் வரிகளை வயலின் ஒன்று அவர்களுடன் சேர்த்து வழியனுப்பிக் கொண்டிருப்பதை இப்போது படம் பார்த்தாலும் உங்களால் கேட்கமுடியும். முழுப்பாடலைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை அந்த வயலின் இசை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே: மணிவண்ணன் இயக்கத்தில் 1994ல் வெளிவந்த அமைதிப்படை திரைப்படத்துக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகப்பட்டாளமே உண்டும். அரசியல் பகடியும், நகைச்சுவையும் நிறைந்த இந்தப் படத்துக்கு இப்படியொரு பாடல் தேவைதானா என்று எண்ணத்தோன்றும் வகையில் அமைந்திருக்கும் "சொல்லிவிடு வெள்ளி நிலவே" பாடல். சத்யராஜ் ரஞ்சிதாவுக்கான டூயட் பாடலாக கேட்டு வாங்கியிருக்கலாம். பாடலை மனோவும் சுவர்ணலதாவும் பாடியிருப்பார்கள். அதுவும் சுவர்ணலதா அந்த உச்சஸ்தாயி வரிகளை பாடும்போது, நம்மை அறியாமலேயே நம் கண்கள் மூடிக்கொள்ளும் உணர்வைத்தரும் இந்தப் பாடல் படத்தில் இடம்பெறாதது துரதிர்ஷ்டமே.

இப்படி இளையராஜா இசையில் உருவாகி, ரெக்கார்டுகளிலும், கேசட்டுகளிலும் தற்போது யூடியூபிலும் மட்டுமே தங்கியிராமல் ரசிகர்களின் மனதில் எப்போதும் ரீங்கரிப்பவை. ராஜாவின் இசையில், காட்சிப்படுத்தப்படாத இன்னும் எத்தனையோ பாடல்கள் அவரது இசையைப் பின்தொடரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்ளின் மனக் கண்களில் காட்சிப்படுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்