திக்குமுக்காட வைக்கும் சென்னை திரைப்பட விழா!

By ஆர்.சி.ஜெயந்தன்

சினிமா ஆர்வலர்களின் பண்டிகையாக மாறிவிட்ட சென்னை சர்வதேசத் திரைப்பட விழா வியாழக்கிழமை முதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு, சென்னையைப் புரட்டிப்போட்ட வார்தா புயல் ஆகிய காரணங்களால் டிசம்பரிலிருந்து ஜனவரியின் தொடக்கத்துக்குத் தள்ளிப்போனாலும் சொல்லி அடிக்கிற மாதிரியான உலகப் படங்களை சினிமா ரசிகர்களின் பார்வைக்கு எடுத்துக்கொண்டு வருகிறது இத்திரைப்பட விழா.

ஜனவரி 12-ம் தேதிவரை 8 நாட்கள் நடைபெற இருக்கிறது. தமிழக அரசின் ஆதரவுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகத் தொழிற்சங்கங்கள் தோள் கொடுக்க, 'தி இந்து' ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் மீடியா பார்ட்னராக கரம் கோக்க, கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகரமான சர்வதேசத் திரைப்படவிழாவாக இதை ஒருங்கிணைத்து நடத்திவருகிறது இன்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.

எதிர்பாராத காரணங்களால் திருவிழா தள்ளிப்போனதையடுத்து உட்லேண்ட்ஸ் திரையரங்க வளாகம் இம்முறை இடம்பெறவில்லை. ஆனால், ஐநாக்ஸ் மால் திரையரங்க வளாகத்தில் உள்ள இரண்டு திரைகள், கேசினோ திரையரங்கம், ரஷ்ய கலாச்சார மையத்தில் உள்ள திரையரங்கம், பெலாஸோ திரையரங்க வளாகத்தில் ஒரு திரை, ஆர்.கே.வி. திரைப்படப்பள்ளியின் திரையரங்கம் ஆகிய ஆறு அதிநவீன திரையரங்குகளில் திரையிடல்கள் நடைபெற இருக்கின்றன.

ஒவ்வொரு திரையரங்குகளிலும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிவரை தினமும் ஐந்து காட்சிகள் இடம்பெறும் 14-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட இங்கே இடம் போதாது. என்றாலும் தவறவிடக் கூடாத படங்களையும் இன்னும் சில முக்கிய அம்சங்களையும் குறித்துத் திரைப்பட விழாவின் இயக்குநர் ஏ.தங்கராஜிடம் கேட்டபோது "கான் படவிழா உட்பட உலகின் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பரிசுகளையும் அள்ளிய 45 நாடுகளைச் சேர்ந்த 150 உலகத் திரைப்படங்களைத் திரையிடலுக்குத் தேர்வு செய்திருக்கிறோம்.

அவற்றில் உலக சினிமா அரங்கில் மாபெரும் திரை ஆளுமை என்று கொண்டாடப்பட்டுவரும் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸஸி தேர்வு செய்திருக்கும் ஆறு போலந்து நாட்டுத் திரைப்படங்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அந்தப் படங்களின் தொகுப்பில் எதையும் ரசிகர்கள் தவறவிட வேண்டாம். அதேபோல நாடுகளின் வரிசையில் ஹாங்காங்கில் செயல்பட்டுவரும் ஏசியன் பிலிம் அவார்ட்ஸ் அகாடமி 5 ஆசிய நாடுகளிலிருந்து தலைசிறந்த 8 படங்களைத் தேர்வு செய்து அளித்திருக்கிறது.

சென்னைத் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சுப் படங்களுக்கு இருக்கும் வரவேற்பே தனி. இந்த ஆண்டு இன்றைய நவீன யுகத்தின் திறமைகளாகப் பளிச்சிடும் ஆறு பிரெஞ்சு இயக்குநர்களின் படங்களை பிரெஞ்சுத் தூதரகமே தேர்வு செய்து அளித்திருக்கிறது. அதேபோல் ஜெர்மனியின் புதிய திறமைகளாகப் பளிச்சிடும் இயக்குநர்களின் 8 படங்களைச் சென்னையில் செயல்பட்டுவரும் கலாச்சார தூதரகமான மேக்ஸ்முல்லர் பவன் தேர்வு செய்து அளித்திருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் 'கட்' என்ற ஜெர்மன் படத்தை அப்போதே திரையிட முயன்றோம். அது இந்த ஆண்டு சாத்தியமாகியிருக்கிறது. இந்த நாடுகளோடு நார்வேயிலிருந்து மூன்று, லக்ஸம்பர்க்கிலிருந்து ஆறு, பிரேசிலிலிருந்து ஐந்து, இரானிலிருந்து பத்து என எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்ற இன்ப அவஸ்தையில் ரசிகர்கள் திக்குமுக்காடப் போவது உறுதி" என்கிறார்.

திரைப்பட விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 9840151956 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்