புகைப்படக் கலையை கற்றுத் தரும் ஆசிரியர் விஜய் சேதுபதி, தன் மாணவி யுடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு பயணிக்கிறார். அங்கு தான் படித்த பள்ளிக்கு செல்ல, பழைய நினைவுகள் அவரது நெஞ்சை வருடுகின்றன. பழைய நண்பர்களைப் பார்க்க ஆசைப்படுகிறார். எல்லோரையும் வாட்ஸ்அப் வழியே பிடிக்
கிறார். 96-ல் பிளஸ் 2 முடித்த நண்பர்கள் ஒரு ரீயூனியனுக்கு திட்டமிட்டு சென்னையில் கூடுகின்றனர். அங்கு தங்கள் பள்ளிப் பருவ நாட்களை அசைபோடுகின்றனர். பத்தாம் வகுப்பில் பிரிந்த விஜய் சேதுபதி, 21 ஆண்டுகள் கழித்து, தன் காதல் தேவதையான த்ரிஷாவை காண்கிறார். ஓர் இரவு முழுவதும் ஒன்றாக செலவிடுகின்றனர். மிகவும் சாதாரண கதைதான். ஆனால் சில தருணங்களை முன்னும் பின்னுமாக நகர்த்தி, திரைக்கதையை மிக நேர்த்தியாக படரவிட்டு அழகோவியமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரேம் குமார்.
முகம் சுளிக்கவைக்கும் ரொமான்ஸ் காட்சி கள் கிடையாது. மரத்தைச் சுற்றி ஓடியாடும் காதல் பாடல்கள் கிடையாது. பெரிய திருப்பங் கள் என்று எதுவும் கிடையாது. ஆனாலும் மெல்லிய நீரோடையாய் சலசலக்கிறது படம்.
நிறைவேறாத காதலை நினைத்தபடியே வாழ்க்கையை ஓட்டுபவராக விஜய் சேது பதிக்கு வித்தியாசமான வேடம். அதை முழுமையாக கொடுத்திருக்கிறார். காதலித்த வனை, தனக்கு திருமணமான பிறகு சந்திக்கும் வேளையில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் கொட்டியிருக்கிறார் த்ரிஷா. இருவரும் படத்தை முழுமையாகத் தோளில் தாங்கி நகர்த்துகிறார்கள். ராமச் சந்திரன் - ஜானகிதேவியாகவே வாழ்ந்திருக் கிறார்கள்.
இளமைக்கால விஜய்சேதுபதியாகஎம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யன், த்ரிஷா வாக கவுரி, உடன் வரும் தோழியாக தேவதர்ஷினியின் மகள் நியாட்டி என இளவயது நடிகர்களும் எக்கச்சக்கமாக ஸ்கோர் செய்கிறார்கள். தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், ஜனகராஜ், ஒரே காட்சியில் வந்துபோகும் கவிதாலயா கிருஷ்ணன் என அனைவரும் படத்துக்கு அழகு சேர்க்கின்றனர்.
பள்ளியில் பலமுறை விஜய்சேதுபதி கேட் டும் ஒருமுறைகூட பாடாத ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலை அந்த இரவில் த்ரிஷா பாடும் தருணமும், அப்போது விஜய்சேதுபதியின் பரவசமும் ரசனையானவை. ரீயூனியனில் நண்பர்கள் அனைவரையும் விட்டுவிட்டு விஜய்சேதுபதி - த்ரிஷா ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவு தான் படத்தின் பலம். அதுவும் விஜய் சேதுபதி யின் மாணவிகள் சூழ்ந்திருக்கும் காட்சியில் தன்னை அவரது மனைவியாகவே காட்டிக் கொண்டு த்ரிஷா பேசும் காட்சி ருசிகரம்.
40-ஐ தொடும் ஆண் மகன் தன் காதலியைப் பார்த்து படும் வெட்கம், ‘தனக்கானவனை தவறவிட்டுவிட்டோமே’ என்கிற ஒரு பெண்ணின் தவிப்பு, பள்ளிப் பருவத்தில் இயல்பாக மலரும் தோழமை என பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார் இயக்குநர். கல்லூரியில் காதலியை காதலன் சந்திக்க முயலும் ஒரே சம்பவத்தை மூன்று கோணங்களில் காட்டும் அம்சம் திரைக்கதையில் மெருகு.
பழைய காதலியுடன் அந்த ஒருநாள் இரவுப் பொழுது. கரணம் தப்பினாலும் விரசமாகிவிடும். ஆனால் எந்த நெருடலும் இல்லாமல், உண்மைக்கு மிகப் பக்கத்தில் போய் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் காட்சிப்படுத்தியதில் நிற்கிறது மொத்த படமும். இரவில் அவர்கள் இருவரும் வரும் நகர்வலக் காட்சிகளில் மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்த மேனனின் இசையும் காட்சிகளை அழகுபடுத்தியிருக்கின்றன.
இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாள ராக (ந.கொ.ப. காணோம்) இருந்து இயக்குநர் ஆனவர் என்பது, ஒளிப்பதிவின் நேர்த்தியில் தெரிகிறது.
இளையராஜா பாடல்களையே வைத்து அந்த காலகட்டத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அதனால், கோவிந்தமேனன் இசையில் வரும் 3 பாடல்களை பின்னுக்குத் தள்ளி, இளையராஜாவும், எஸ்.ஜானகியுமே நெஞ்சம் நிறைந்து நிற்கிறார்கள். 90-களிலேயே வந்துவிட்ட தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையை ஏன் காட்டவில்லை என்பது தெரியவில்லை.
அளவுக்கு அதிகமாக காதலை புனிதப் படுத்தியிருப்பதும், மெலோ டிராமாவை திகட்டத் திகட்டத் தந்திருப்பதும் சற்று அயர்ச்சியை தருகிறது. ரசிகர்கள் தங்களது ஃபிளாஷ்பேக்குகளுக்கு போய் வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ‘ஆட்டோகிராப்’ தேவைப்படுகிறது. அதை உணர்ந்து, ‘காதலுக்கு முன்னர் காலம் எம்மாத்திரம்’ என்ற பம்மாத்தை பரவசமான அனுபவமாகத் தந்திருக்கிறது ‘96’.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago