அறம் -உன்னத சினிமா!

By உதிரன்

|15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டிசம்பர் 17-ம் தேதி ரஷ்ய கலாச்சார மையத்தில் மதியம் 3 மணிக்கு திரையிடப்படவுள்ள 'அறம்' பற்றிய பார்வை|

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.

விவசாயக் கூலியான ராமச்சந்திரன் துரைராஜ் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கிராமத்துவாசி. மகன் விக்னேஷுக்கு நீச்சலில் சாதிக்க ஆசை. முன்னாள் கபடி வீரரான ராமச்சந்திரன் படித்தால் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, மரியாதையாவது கிடைக்கும் என்று அறிவுரை சொல்கிறார். பொருளாதாரப் பிரச்சினை வாட்டி எடுக்கும் சூழலிலும் பாசமும், அன்பும் இவர்கள் வாழ்க்கையை அழகாக்குகிறது. இந்த சூழலில் ராமச்சந்திரனின் மனைவி சுனுலக்‌ஷ்மி தன் நான்கு வயது மகளுடன் முள்ளு மரம் வெட்டச் செல்கிறார். அந்தப் பகுதியில் இருக்கும் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி மகாலட்சுமி எதிர்பாராவிதமாக விழுந்துவிடுகிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறது, சிறுமி மகாலட்சுமி என்ன ஆனார், மாவட்ட ஆட்சியரான நயன்தாரா என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பது மீதிக் கதை.

உயிரோட்டமான கதைக்களத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் தரமான சினிமாவைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். இவரின் வரவால் தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆரோக்கியமான முயற்சிகள் தொடரும் என்று தாராளமாக நம்பலாம்.

பார்க்கின்ற படங்களில் எல்லாம் கொலை, கொள்ளை, வெட்டுக்குத்து போன்ற குற்றச்செயல்களுக்காக ஸ்கெட்ச் போட்டு கெத்து காட்டும் ராமச்சந்திரன் துரைராஜ் இதில் முற்றிலும் வித்தியாசமாக, பொறுப்பான தந்தையாக பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரின் சொல்லும், செயலும் நம்மை கலங்கடிக்க வைக்கின்றன. ராமச்சந்திரன் துரைராஜின் நடிப்புக்காகவே இன்னும் பல பட வாய்ப்புகள் வாசலில் வரிசை கட்டி நிற்கும்.

மனம் முழுக்க பிள்ளைகளைச் சுமக்கும் ஒப்புயர்வற்ற தாயாக சுனுலக்‌ஷ்மி இயல்பான நடிப்பால் கவர்கிறார். குழந்தையை நினைத்து ஏங்குவதும், மருகுவதும், அழுது புலம்புவதுமாக தன் இருப்பை மிகச் சரியாக உணர்த்துகிறார்.

நான்கு வயது சிறுமி மகாலட்சுமியின் நடிப்பு தகுதிவாய்ந்தது. காக்கா முட்டை ரமேஷ், விக்னேஷ், வேல ராமமூர்த்தி, முத்துராமன், டி.சிவா, கிட்டி, வினோதினி வைத்தியநாதன் என்று படத்தில் வரும் துணை கதாபாத்திரங்கள் அனைவரும் தத்தம் பாத்திரம் உணர்ந்து தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ராமச்சந்திரனின் நண்பனான பழநி பட்டாளம் அரசாங்கத்துக்கு எதிராக கேள்வி கேட்டு ஆவேசமாகப் பேசும் நடிப்பில் தனித்துத் தெரிகிறார்.

நயன்தாராவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இந்தப் படம் உறுதுணை புரிகிறது. நேர்மை, துணிச்சல், உண்மை என மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் கம்பீரம் பளிச்சிடுகிறது. சிறுமியை மீட்கப் போராடும் தருணத்தில் நயன்தாரா எடுக்கும் முயற்சிகளும், அதை வெளிக்காட்டும்போது உணர்வைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பிறகான விளைவுகளில் நிலைமையின் தீவிரம் உணர்ந்து உடைந்து அழுவதுமாக தன் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். 'அரசாங்கம்னா நான் மக்கள்னு நினைக்கிறேன்' என்று மக்களுக்காகவே யோசித்து செயல்படும் ஆட்சியராக நிமிர்ந்து நிற்கிறார்.

இயக்குநர் கோபி நயினார் கதைக்களம், காட்சி அமைப்பு, கதாபாத்திரத் தேர்வு, திரைக்கதை என அத்தனையிலும் மிகுந்த கவனம் எடுத்து செதுக்கி இருப்பது படத்தில் பிரதிபலிக்கிறது. சமுதாயப் பிரச்சினைகளை அலசும்போது ஒட்டுமொத்த அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் குறை சொல்லாமல் அடுக்குகளின் எந்த மட்டங்களில் பிரச்சினை நிலவுகிறது என்பதை நடுநிலை தவறாமல் பதிவு செய்திருக்கிறார். இதனாலேயே சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளியாக கோபி நயினார் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார்.

வாட்டர் பாட்டில் வந்த பிறகு வந்த தண்ணீர் பஞ்சம், விவசாய பூமியில் விவசாயம் பொய்த்துப் போனதால் மாற்று வேலைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும் நடைமுறை யதார்த்தம், அறிவியல் வளர்ச்சியின் பயன் எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மை என எல்லாம் மனசாட்சியை உலுக்குகிறது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்க, அதற்கான உபகரணங்களை தயாரிக்க சில ஆயிரங்கள் கூட செலவு செய்யவில்லை என்ற அவலத்தை முகத்துக்கு நேராக சொல்லும் விதம் உறைய வைக்கிறது.

ஓம் பிரகாஷின் கேமரா ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தையும், சிறுமியின் போராட்டத்தையும் பதற்றத்துடன் நமக்குக் கடத்துகிறது. ஜிப்ரானின் உயிர் உருகும் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கிறது. வலுவான பல காட்சிகள் ஜிப்ரானின் இசையால் ஜீவனுள்ளதாக மாறுகிறது. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது. ஆழ்துளை கிணறு தொடர்பான காட்சிகளில் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.

இந்தப் படத்துக்கு இடைவேளை தேவையா? விவாத நிகழ்ச்சியை ஏன் கத்தரி போடாமல் நீட்டித்துக்கொண்டே செல்கிறார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன.இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'அறம்' உன்னத சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்