ஒரு கிடாயின் கருணை மனு - நிராகரிக்கக் கூடாத சினிமா!

By உதிரன்

|டிசம்பர் 17-ம் தேதி ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 6:00 மணிக்கு திரையிடப்படவுள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தைப் பற்றிய பார்வை|

நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயிலுக்குச் செல்லும் கிராம மக்கள் கோர்ட் படி ஏறி நிற்கும் கதையே 'ஒரு கிடாயின் கருணை மனு'.

தன் பேரனுக்கு சீக்கிரம் திருமணம் நடந்தால் கிடாயை (ஆடு) குலதெய்வம் முனியாண்டி கோயிலுக்கு பலி கொடுப்பதாக வேண்டிக்கொள்கிறார் விதார்த் பாட்டி. விதார்த்துக்கும் ரவீணா ரவிக்கும் திருமணம் நடந்த 3-வது நாளில் வேண்டுதலை நிறைவேற்ற லாரியில் தம்பதி சகிதம் கிராமமே புறப்படுகிறது. அப்போது எதிர்பாராமல் நிகழும் ஒரு அசம்பாவிதம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அப்படி என்ன நடந்தது, அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே திரைக்கதை.

உயிரின் முக்கியத்துவம் குறித்து எந்த பிரச்சாரமும் இல்லாமல் உயிர்ப்புடன் பதிவு செய்த விதத்தில் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா கவனம் ஈர்க்கிறார்.

புது மாப்பிள்ளைக்கான தோரணை, காதலும் ஏக்கமும் கலந்த பார்வை, அசம்பாவிதத்துக்கான காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்வு, பயம் அப்பிய கண்கள், பதற்றம் மறைக்க சிரமப்படுவது என கச்சிதமான நடிப்பை விதார்த் வழங்கியிருக்கிறார். இருக்கிற எல்லா பிரச்சினைகளையும் மறந்துவிட்டு எனக்கு 35 வயசுன்னு உனக்கு யார் சொன்னது? என எகிறும் இடமும், அது என்ன தரங்கெட்ட பேச்சு என விதார்த் தாக்கும் விதமும் ரசனை.

குரலில் இருக்கும் வெளிப்பாட்டுத் திறன் ரவீணா ரவியின் நடிப்பில் இல்லை. தன் கணவன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனியாய் விட மனசில்லாமல் கூடவே அழைத்துச் செல்லும் இடங்களிலும், எல்லாமே என்னாலதான் என மருகும் இடத்திலும் கதாபாத்திரத்துக்கான நியாயமான நடிப்பை வழங்க முயற்சித்திருக்கிறார்.

கொண்டியாக வரும் ஆறு பாலாதான் படத்தின் பல இடங்களில் சர்வ சாதாரணமாய் தனித்து ஸ்கோர் செய்கிறார். அவர் பிரச்சினையை சமாளிக்கும் விதமும், பதிலடி கொடுக்கும் விதமும் சுவாரஸ்யம். சேவல் மாஸ்டராக வரும் சித்தன் மோகன், அரும்பாடு பட்டு என வார்த்தைக்கு வார்த்தை நகலெடுக்கும் ஹலோ கந்தசாமி, மகன் காணாமல் போனதால் கோபக் கனல் தெறிக்கும் ஜெயராஜ், லாரி டிரைவர் வீரசமர், லாரி உரிமையாளர் செல்வமுருகன், விதார்த் பெரியப்பாவாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன், வழக்கறிஞராக வரும் ஜார்ஜ், கறி சோறுக்காக விருந்துக்கு செல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் வைரவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்ந்த நடிப்பால் மனதில் நிற்கின்றனர்.

ஆட்டின் பார்வைக் கோணத்தில் வரும் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் விதத்தில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரண். அந்த உத்தி கவனிக்க வைக்கிறது. ரகுராம் இசையில் தனியா கிடந்தேன் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துடன் ஒன்றிப் போகிறது. பிரவீனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.

குருநாதன் - சுரேஷ் சங்கையா வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. இயக்குநர் சுரேஷ் சங்கையா கிராமத்து மண் வாசனையை, குலதெய்வ வழிபாட்டு முறைக்கான முன்னெடுப்பை, அவர்கள் வாழ்வியலை நுட்பமான பதிவுகள், விவரணைகள் மூலம் படம் முழுக்க பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. எடுத்துக் கொண்ட களத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

வழக்கறிஞர் ஜார்ஜ் அசாம்பாவிதத்தை சொன்ன பிறகுதான் போலீஸ் வருகிறது. ஆனால், எப்படி அவ்வளவு பெரிய படையோடு திரண்டு வருகிறார்கள், அதற்கான முகாந்திரம் என்ன என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. இரு கிராம மக்களும் மல்லுக்கட்டும்போது படம் வழக்கமான சினிமாவுக்கான கூறுகளை உள்ளடக்கி இருப்பதோடு, தொய்வடைகிறது.

வழக்கறிஞர் பாத்திரத்தின் மூலம் உறவின் நிலையையும், யதார்த்தத்தையும் பிரதிபலித்திருப்பது சிறப்பு. ஒரே சாலையில் ஒரு புறம் ஆட்டைப் பலிகொடுக்க லாரியில் புறப்படும் கிராமத்தினர், இன்னொரு புறத்தில் அடிமாடுகளைக் கொண்டு செல்லும் லாரி என உயிரின் உன்னதத்தை காட்சிகளால் உணர்த்தி இருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அந்த விதத்தில் 'ஒரு கிடாயின் கருணை மனு' நிராகரிக்கக் கூடாத சினிமா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்